6 தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களுடன் திமுகவுக்கு தாவுகிறார் செந்தில் பாலாஜி !! தோல்வியில் முடிந்த சமாதான முயற்சி !!

By Selvanayagam PFirst Published Dec 12, 2018, 7:15 AM IST
Highlights

வரும் ஞாயிற்றுக் கிழமை சென்னை அறிவாலயத்தில் நடைபெறவுள்ள கருணாநிதி சிலை திறப்பு விழாவின்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட 6 எம்எல்ஏக்களுடன் திமுகவில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக செந்தில் பாலாஜியை டி,டி,வி.தினகரன் சமாதானம் செய்ய முயன்றும் அவர் மறுத்துவிட்டதாகவும் தெரிகிறது.

கரூரை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் டி.டி.வி. தினகரனுடன் இணைந்து செயல்பட்டார். சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வான அவர் மீண்டும் அரவக்குறிச்சி தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக  செந்தில் பாலாஜியின் செயல்பாடுகளில் மாற்றம் தென்பட்டது. பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்த பின்னர் அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையே செந்தில் பாலாஜி தி.மு.க.வில் இணையப் போவதாகவும், அக்கட்சி தலைமையுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வருகிற 16-ந்தேதி சென்னையில் நடைபெறும் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இணைந்த பின்னர் கரூருக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை வரவழைத்து மிக பிரமாண்டமான முறையில் இணைப்பு விழாவினை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இதற்கிடையே செந்தில் பாலாஜி தனது ஆதரவாளர்களிடம் கருத்துக்களை கேட்டு வருகிறார். பெரும்பாலான நிர்வாகிகள் அவருடன் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளதாக கட்சியினர் தெரிவித்தனர். ஆளுங்கட்சியை எதிர்த்து அரசியல் செய்ய தி.மு.க.தான் சரியான களம் என ஆதரவாளர்கள் பலரும் கூறியுள்ளனர்.

இருந்தபோதிலும் தினகரன் சமாதானம் செய்ய முயற்சி செய்து வருகிறார். நேற்று முன்தினம் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் கரூர் வந்தார். அவர் செந்தில் பாலாஜியை சந்தித்து பேசி விட்டு சென்றார். அவர் செந்தில் பாலாஜியை சமாதானம் செய்ய வந்தாரா? அல்லது அவரும் தி.மு.க. பக்கம் சாய்கிறாரா? என்று கேள்வி எழுந்தது.

இந்தநிலையில் அ.ம.மு.க. கட்சியின் மாநில பொருளாளர் தஞ்சை ரங்கசாமி செந்தில் பாலாஜியை சமாதானப்படுத்துவதற்காக வந்திருந்தார். நீண்ட நேரம் அவர் செந்தில்பாலாஜி அலுவலகத்தில் காத்திருந்தார். ஆனால் செந்தில்பாலாஜி வரவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அவர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார். இதனால் சமாதான முயற்சி தோல்வி அடைந்துள்ளது.

தி.மு.க.வில் இணைவது பற்றியோ, இணைய மாட்டேன் என்றோ? எந்த கருத்தையும் செந்தில்பாலாஜி இதுவரை தெரிவிக்கவில்லை. கடந்த இரு தினங்களாக கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அவரது அலுவலகம் முன்பு பத்திரிகை, தொலைக்காட்சி நிருபர்கள் முகாமிட்டுள்ளனர்.

அதே போன்று ஆதரவாளர்களும் ராமகிருஷ்ணபுரம் வந்தபடி உள்ளனர். அவர் எப்போது மவுனம் கலைப்பார் என ஆதரவாளர்களும், தி.மு.க.வினரும் எதிர் முகாமில் உள்ள ஆளுங்கட்சியினரும் ஆர்வமாக உள்ளனர்.  செந்தில்பாலாஜி தி.மு.க.வில் இணையும்

வி‌ஷயம் பரபரப்பாக பேசப்படவேண்டும் என நினைப்பதாக தெரிகிறது. 16-ந்தேதி மு.க.ஸ்டாலினை சந்தித்த பின்னர் நிச்சயம் மவுனம் கலைப்பார் என நம்பப்படுகிறது.

மேலும் செந்தில்பாலாஜி மட்டுமின்றி, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 6 பேரும் தி.மு.க.வில் இணைய உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

ஆனால் இந்த சர்ச்சை தமிழக அரசியலில் அ.ம.மு.க.வை பலவீனப்படுத்தும் முயற்சி என்று அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.ஆனால் அமமுகவைச் சேர்ந்தவர்கள் யாரும் தி.முகவில் இணைய மாட்டார்கள். சமூக வலைதலங்களில் வந்த கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை என  முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தெரிவித்துள்ளார்.

click me!