சட்ட விரோத பணப்பறிமாற்றம் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், ஜாமின் மனு தொடர்பாக வழக்கு விசாரணை இன்று நடைபெறவுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது
அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, வேலை வாங்கி தருவதாக கூறி ஏராளமானோரிடம் சட்ட விரோதமாக பணம் பெற்றதாக புகார் கூறப்பட்டது. இந்த வழக்கானது பல கட்டங்களை கடந்த பின்னர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
அப்போது அவருக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து இருதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த சிகிச்சை முடிவடைந்ததையடுத்து புழல் சிறையில் செந்தில் பாலாஜி அடைக்கப்பட்டார். அப்போது தனக்கு ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி பல முறை முறையிட்டார்.
அமைச்சர் பதவி ராஜினாமா
ஆனால் அமைச்சர் பதவியில் நீடிப்பதால் சாட்சிகளை கலைக்க வாய்ப்பு இருப்பதாக கூறி ஜாமினை கீழமை நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை தள்ளுபடி செய்தது. இதனால் சிறையில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தார். சிறையிலும் பல முறை உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக அவ்வப்போது அரசு மருத்துவமனைக்கு வெளியே போலீசார் அழைத்து சென்றனர். இந்த சூழ்நிலையில் செந்தில் பாலாஜின் காவல் 19வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தனது அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்து ஷாக்கொடுத்தார். செந்தில் பாலாஜியின் ராஜினாமாவை ஆளுநருக்கு முதலமைச்சர் அனுப்பி வைத்த நிலையில் ஆளுநரும் செந்தில் பாலாஜியின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டார்.
ஜாமின் மனு இன்று விசாரணை
இதனையடுத்து இன்று செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணை நடைபெறுகிறது. அப்போது அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துள்ளதால் சாட்சிகளை கலைக்க வாய்ப்பு இல்லையென நீதிமன்றத்தில் அவரது தரப்பு வழக்கறிஞர்கள் வாதாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த 7 மாதங்களுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது தொடர்பாவும், அவரது உடல்நிலையை கருதி ஜாமின் வழங்கு வேண்டும் என கேட்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதே நேரத்தில் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கும் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்