இன்று நடைபெறுவதாக இருந்த திமுக - செந்தில் பாலாஜி இணைப்பு விழா நாளைக்கு தள்ளிப் போனது ஏன் தெரியுமா ? சுவாரஸ்ய தகவல் !!

By Selvanayagam PFirst Published Dec 13, 2018, 8:31 PM IST
Highlights

நானும் ஒரு நாலு பேரும்  மட்டும் சென்னை வந்து திமுகவில் இணைந்தால் அது எதிரிகளுக்கு கேவலமாக பேச வாய்ப்பாகிவிடும் என்பதால் ஆயிரக்கணக்கானோரைத் திரட்டி வந்து இணைய ஒரு நாள் டைம் வேண்டும் என செந்தில் பாலாஜி கேட்டுக் கொண்டதால், திமுகவில் இன்று இணைவதாக இருந்த விழா நாளைக்கு  தள்ளி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

செந்தில் பாலாஜி இன்று திமுகவில் இணைய டைம் கொடுக்கப்பட்டிருந்ததால் மும்பை சென்றிருந்த  ஸ்டாலின், அவசரமாக இன்று காலையே சென்னைக்குத் திரும்பினார். ஆனால், செந்தில் பாலாஜி தரப்பில் இருந்து கே.என்.நேருவிடம் பேசியிருக்கிறார்கள். ‘கரூரில் பிரமாண்டமான இணைப்பு விழா நடத்தினாலும் சென்னையில் நான் மட்டும் நாலு பேரோட வந்து கட்சியில் சேர்ந்தால் மரியாதையாக இருக்காது.

ஏற்கனவே  அமமுகவில் இருந்த சிலர் மாவட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்துட்டாங்க. இப்போ நாலு பேரோட நான் வந்தால், எனக்கான ஆட்களே இல்லை என்பது போல தினகரன் பேசுவாரு. அதனால அறிவாலயத்துக்கு எங்க ஊரில் இருந்து கொஞ்சம் கூட்டத்தோடு வரேன். ஒருநாள் மட்டும் அதுக்கு டைம் கொடுங்க...’ என கேட்டுள்ளார்.

கே.என். நேருவும் இது தொடர்பாக ஸ்டாலினிடம் பேசிவிட்டு, ஓகே சொல்ல... இன்று காலை கரூருக்கு புறப்பட்டுவிட்டார் செந்தில் பாலாஜி. அதற்குள் கரூரில் உள்ள நிர்வாகிகளிடம் பேசி சென்னைக்கு புறப்படுவதற்கான வேலைகளையும் செய்ய ஆரம்பித்திருக்கிறார் செந்தில் பாலாஜி.

காலை கரூருக்குப் போனவர், உடனடியாக அங்கிருக்கும் பஸ் உரிமையாளர்கள் சிலரிடம் பேசி, நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்துப் போக பஸ், வேன் என ஏற்பாடு செய்திருக்கிறார். மேலும் கரூரில் இருந்து நிர்வாகிகளை கணக்கெடுத்துச் சென்னைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

கரூரில் தங்கியிருக்கும் செந்தில் பாலாஜி இன்று இரவு கோவைக்கு சென்று அங்கிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்து சேருவாராம். கரூரில் இருந்து சென்னைக்கு வரும் நிர்வாகிகளைத் தங்க வைக்கும் பொறுப்பை திமுகவில் உள்ள சிலர்தான் கவனித்து வருகிறார்கள். நாளை மதியம் 12 மணிக்கு பிறகு இணைப்பு விழாவை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

click me!