
தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், சுய விளம்பரத்துக்காக, எடப்பாணி அணியை குறித்து ஓ.பன்னீர்செல்வம் பேசி வருகிறார் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியபோது அவர் பேசியதாவது:-
பிளஸ்-2 தேர்வில் ஒரு கோடியே 20 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படக்கூடாது என்பதற்காக ரேங்க் பட்டியலை மாற்றி கிரேடு அடிப்படையில் மதிப்பெண் வழங்கும் முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பெற்றோர் மாணவரை திட்டுவதும் அதனால் ஏற்படும் மனநிலையும் மாறி உள்ளது.
எஸ்.எம்.எஸ்.மூலம் 8 லட்சத்து 72 ஆயிரத்து 646 பேர் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். வரும் பள்ளி கல்வி மானிய கோரிக்கையில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.
கல்வியில் புதிய புரட்சியாக தமிழில் மதிப்பெண் சான்றிதழ், பிளஸ்-1 வகுப்பு தேர்வை பொது தேர்வாக நடத்த பரிசீலனை நடந்து வருகிறது.
தமிழக மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த புதிய பாடத்திட்டம் அமைக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் நீட் தேர்வு உள்பட தேர்வுகளை எளிதில் சந்திக்க முடியும். 6-ம் வகுப்பு முதல் கம்ப்யூட்டர் மூலம் பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட உள்ளது என்றார்.
எதிர் அணி தலைவரான ஓ.பி.எஸ். விரைவில் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு கவிழும். சட்டமன்ற தேர்தல் சில மாதங்களில் நடைபெறும் என கூறி வருகிறார்.
ஒவ்வொருவருக்கும் ஒரு பேராசை உண்டு. அதன் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம், சுய விளம்பரத்துக்காக கருத்துக்களை கூறுகிறார். அது ஏற்புடையது அல்ல. அரசு கவிழும் என்று யார் கூறினாலும், அந்த கனவு பலிக்காது.
தமிழகத்தில் 50 ஆண்டுகள் அல்ல 100 ஆண்டுகள் ஆனாலும் அ.தி.மு.க. ஆட்சிதான் நடைபெறும். இதை அனைவரும் பார்க்கத்தான் போகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.