
ஜெயலலிதா முதல்வராக இருந்த பொது, அவராக அழைத்து ஏதாவது கேட்டால் மட்டுமே, அதிகாரிகள் ஆலோசனை சொல்வார்கள். தாமாக சென்று எதையும் சொல்வதில்லை.
ஆனால், முதல்வர் எடப்பாடியிடம், எதுவாக இருந்தாலும், நேரடியாக பேச ஆரம்பித்து விட்டனர். நாம் சொல்வதை சொல்லி விடுவோம். கேட்பதும், கேட்காததும் அவர் விருப்பம் என்று அதிகாரிகள் நினைக்கின்றனர்.
இந்நிலையில், குடிசை மாற்று வாரியம் சார்பில், கோவை மற்றும் நெல்லையில் சில வீடுகளும், கட்டிடங்களும் கட்டப்பட்டிருந்தன. அதை ஜெயலலிதா பாணியில், தலைமை செயலகத்தில் இருந்தவாறே, முதல்வர் எடப்பாடி, காணொளி மூலம் திறந்து வைத்துள்ளார்.
அதன் பின்னர், தலைமை செயலகத்தில் இருந்த முக்கிய அதிகாரி ஒருவர், முதல்வரிடம், ஜெயலலிதா போலவே, நீங்களும் காணொளி மூலம் திறந்து வைக்க வேண்டாம் என்று கூறி உள்ளார்.
ஜெயலலிதாவை பொறுத்தவரை, அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததால், அவர் காணொளி மூலம் திறந்தால், மக்கள் அதை ஒரு குறையாக எடுத்து கொள்ள மாட்டார்கள்.
உங்களை பொறுத்தவரை, சிறிய நிகழ்ச்சியாக இருந்தாலும், மக்களை நேரடியாக சந்திப்பதற்கான வாய்ப்பு என்று நினைத்து, கூடுமானவரை நேரடியாக சென்று பங்கேற்றால் நல்லது.
மக்களும், நேரில் கலந்து கொண்டு திறந்து வைப்பதையே விரும்புகிறார்கள். முதல்வர் நேரில் வரமாட்டாரா? என்று மக்கள் கூறுவதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது என்று அந்த அதிகாரி கூறி உள்ளார்.
அப்படியா? என்று ஆச்சர்யத்துடன் கேட்ட எடப்பாடி, மக்கள் அப்படி எல்லாம் எதிர்பார்க்கிறார்களா?. நான் சிறிய விழா தானே, அவசரத்திற்கு இங்கிருந்தே திறக்கலாம் என்று நினைத்துவிட்டேன். இனி சிறிய விழாவாக இருந்தாலும், நேரடியாக செல்கிறேன் என்று கூறி இருக்கிறார்.
இதை அறிந்த மற்ற அதிகாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இனி எதுவாக இருந்தாலும், நாமும் முதல்வரிடம் நேரடியாக சொல்லுவோம் என்ற முடிவுக்கு வந்துள்ளார்களாம்.