
தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரை ஆளுநர் முடித்து வைத்திருப்பதற்கு கடும் எண்டனம் தெரிவித்துள்ள திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் நிதி நிலைமை மோசமாக இருப்பதை அவர் உணரவில்லையா என கேள்வி எழுப்பினார்.
கடந்த 2 மாதங்களுக்கு முன் தமிழக அரசின் பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஜெயகுமார் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். ஆனால் பட்ஜெட் மீதான விவாதம், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு ஆகியவை முறையாக நடைபெறவில்லை என , காலம் தாழ்த்தாமல் நடத்த வேண்டும் என மு.க.ஸ்டாலின் கோரிக்கைவிடுத்திருந்தார்.
இந்நிலையில் மே 11 ஆம் தேதியுடன் சட்ட மன்ற கூட்டத்தொடரை இறுதி செய்து உத்தரவிட்டுள்ளார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அரசு மற்றும் நிதி நிர்வாகத்தை பாதிக்கும் வகையில் சட்டமன்ற கூட்டத்தொடரை இறுதி செய்து இருப்பது ஜனநாயக விரோதச் செயல் என குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயகத்திற்கு ஒவ்வாத மரபுகளை தொடர்ந்து உருவாக்கி வருவது கவலை அளிக்கிறது என்றும் இதனை கவர்னர் தட்டி கேட்காமல் இறுதி செய்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விதிகளை புறக்கணித்து சட்டசபை ஜனநாயக கழுத்தை நெறிப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழக நிதிநிலைமை மேலும் மோசமடையும் ஆபத்து உருவாகியுள்ளதை உணர வேண்டும் என குறிப்பிட்டுள்ள மு.க.ஸ்டாலின் , மானிய கோரிக்கைகளை விவாதித்து வாக்கெடுப்பு நடத்த மேலும் காலம் தாழ்த்தக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.