
எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எப்போதுமே தளபதியாக மட்டுமே இருக்க முடியுமே தவிர, என்றைக்கும் மன்னராக முடியாது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ''விவசாயிகள் நலன் கருதி பயிர்ப் பாதுகாப்பு திட்டம் என்ற முறையில் இந்தியாவில் ஏறத்தாழ ரூ.16 ஆயிரம் கோடி இன்சூரன்ஸில் உள்ளது. அதில் தமிழகத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி பயிர்ப் பாதுகாப்பு திட்ட இன்சூரன்ஸாக பெறப்பட்டுள்ளது.
தமிழக விவசாயிகள் நலன் கருதி யாருமே செய்ய முடியாத பணிகளை அரசு மேற்கொண்டுள்ளது. தமிழக அரசு வேகமாக, விரைவாக பணிகளை மேற்கொள்கிறது.
வறட்சி நிவாரணமாக இதுவரை ரூ.2 ஆயிரத்து 647 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இந்த அரசு வேகமாக செயல்படவில்லை, செயலிழந்த அரசாக இருக்கிறது என்று குறிப்பிட்டார். இந்த அரசு செயலிழந்த அரசாக இல்லை என்பதை ஸ்டாலினுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
தமிழக அரசின் செயல்பாடுகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது. எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தளபதியாக மட்டும் தான் இருக்க முடியும். ஒருபோதும் மன்னராக முடியாது. எதையாவது செய்து ஆட்சியைக் கைப்பற்றி முதல்வராகிவிடலாம் என்ற ஸ்டாலினின் பகல் கனவு ஒருபோதும் பலிக்காது. இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.