தமிழகத்திலிருந்து ஆக்சிஜனை ஆந்திராவுக்கு அனுப்புவதா..? கொந்தளிக்கும் ஆயிரம் விளக்கு தொகுதி திமுக வேட்பாளர்!

By Asianet TamilFirst Published Apr 22, 2021, 9:43 PM IST
Highlights

தமிழகத்திலிருந்து ஆக்சிஜனை ஆந்திராவுக்கு அனுப்ப வேண்டிய அவசியம் என்ன வந்தது என்று ஆயிரம் விளக்கு தொகுதி திமுக வேட்பாளரும் மருத்துவருமான எழிலன் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

ஆயிரம் விளக்கு தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தற்போதைய சூழலில் கல்வியும் சுகாதாரமும் பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு வர வேண்டும். அப்போதுதான் பேரிடர் காலங்களில் நம்மால் சமாளிக்க முடியும். நமக்கே தட்டுப்பாடு நிலவும்போது வெளி மாநிலத்துக்கு ஆக்சிஜனை ஏற்றுமதி ஏன் செய்ய வேண்டும்? ஸ்ரீபெரும்புதூரில் இருந்து ஆந்திரப் பிரதேசத்துக்கு ஆக்சிஜன் சென்றுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் எங்களிடம் கேட்காமலேயே 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஆந்திரப் பிரதேசத்துக்கு அனுப்பி விட்டனர் என்கிறார். ஆந்திராவுக்கு விசாகப்பட்டினத்தில் ஆக்ஸிஜன் உருவாக்கும் மையம் இருக்கிறது. தமிழகத்திலேயே தட்டுப்பாடாக இருக்கும்போது ஆந்திராவுக்கு ஆக்ஸிஜனைக் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? தமிழ்நாட்டில் இப்போது ரெம்டெசிவர் மருந்தும் பற்றாக்குறையாக உள்ளது. நிலைமை கைமீறிப் போன பிறகுதான் பிரதமர் மோடி, மாநில அரசுகளிடம் நீங்கள் சந்தையில் கரோனா மருந்துகளை வாங்கிக் கொள்ளலாம் என்கிறார்.
அதே நேரத்தில் மாநில அரசுக்கு 400 ரூபாய்க்கும் தனியாருக்கு 600 ரூபாய்க்கும் தடுப்பூசி விலை வைத்து விற்கப்படுகிறது. இதுவே மத்திய அரசுக்கு ரூ.150 ரூபாயாம். ஒரே தடுப்பூசிக்கு எப்படி 3 விலை இருக்க முடியும்? கொரோனா தடுப்பு மருந்துகள் கையிருப்பு எவ்வளவு உள்ளது, கொள்முதல் எவ்வளவு என்பதை மாநில அரசுகள் முதலில் தெளிவுபடுத்த வேண்டும். அதுமட்டுமல்ல, மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள் உள்ளனவா, ஆக்சிஜன் வசதி உள்ளனவா, மருத்துவர்கள், செவிலியர்கள் போதிய அளவில் உள்ளார்களா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று மருத்துவர் எழிலன் கூறினார்.

click me!