9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்புங்கள்.. மாநில தகவல் ஆணையம் தலைமை செயலாளருக்கு பரிந்துரை.

By Ezhilarasan BabuFirst Published Apr 10, 2021, 11:37 AM IST
Highlights

தமிழ்நாடு மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி  நிறுவனம் தயாரித்த புத்தகங்களில் கொடுக்கப்பட்டுள்ள விடைகளை சரியாக உதவிப் பேராசிரியர் பணியிட தேர்வில் குறிப்பிட்டிருந்தும், ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் மதிப்பெண் வழங்காத விவகாரத்தில் இந்த நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் பொறுப்பு வகித்த 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை  கட்டாய ஓய்வில் அனுப்புமாறு மாநில தகவல் ஆணையம் தமிழக தலைமை செயலாளருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வுகளில் வெளிப்படைத் தன்மையை கடைபிடிக்கவில்லை என மாநில தகவல் ஆணையம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இதனையடுத்து மாநில தகவல் ஆணையத்தின் ஆணையர் பொறுப்பு வகிக்கும் முத்துராஜ் தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 -இன் படி தமிழக தலைமை செயலாளருக்கு, ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை அனுப்பியுள்ளார். 

தமிழ்நாடு மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி  நிறுவனம் தயாரித்த புத்தகங்களில் கொடுக்கப்பட்டுள்ள விடைகளை சரியாக உதவிப் பேராசிரியர் பணியிட தேர்வில் குறிப்பிட்டிருந்தும், ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் மதிப்பெண் வழங்காத விவகாரத்தில் இந்த நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், தேர்வு எழுதியவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் உதவிப்பேராசியர் பணியிடத்திற்கான தேர்வில் அதற்குரிய  விடைகளை எந்த புத்தகத்தில் தேர்ந்தெடுத்தனர் என்கிற புத்தகம் விவரங்களை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தேர்வெழுதியவர்கள் கேட்டிருந்தனர். 

இந்த விவகாரத்தில் தமிழ்நாடு தகவல் ஆணையம் நடத்திய பல கட்ட விசாரணையில், ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த சில ஆண்டுகளாக நடத்திய பல தேர்வுகளில் கேள்விகள் வடிவமைப்பு, விடைக்குறிப்புகளை தயாரித்தல்  உள்ளிட்ட பல விவாகரங்களில் வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்க வில்லை என்பது தெரியவந்துள்ளதாக மாநில தகவல் ஆணையர் தமிழக அரசுக்கு தெரிவித்துள்ளார். இதனால் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் பொறுப்பு வகித்த 9 அதிகாரிகளை கட்டாய பணி ஓய்வில் அனுப்புமாறு தகவல் ஆணையம் மாநில அரசுக்கு பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

click me!