பா.ஜ.கவின் வெறுப்பு அரசியல் தோற்கடிக்கப் பட்டுள்ளது. ஊழல், மதவாதம், எதேச்சதிகாரம், வெறுப்பரசியல் கொண்ட பாசிச பாஜகவை வீழ்த்திய கர்நாடக மக்களின் தீர்ப்பு, வரவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாகும். நிச்சயமாக மக்களின் தீர்ப்பு வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ்
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைக்கவுள்ள நிலையில், இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் , கர்நாடகா மாநிலத்தில் கடந்த 1986 ஆம் ஆண்டு 43.7 சதவீத வாக்குகளுடன் 178 இடங்களில் வென்று காங்கிரஸ் பேரியக்கம் ஆட்சியமைத்தது. அதன்பின் தற்போது 34 ஆண்டுகளுக்குப் பிறகு கர்நாடகாவில் 135 இடங்களையும், அதிக வாக்குகளையும் பெற்று கர்நாடகாவில் காங்கிரஸ் பேரியக்கம் சாதனை வெற்றிப் பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது. இந்த வெற்றியானது உண்மையிலேயே கர்நாடக மக்களின் வெற்றி. மக்கள் தங்களின் பிரகாசமான எதிர்காலம், அவர்களின் நலன் மற்றும் சமூக நீதிக்காக வாக்களித்துள்ளனர்.
வெறுப்பு அரசியல் தோற்கடிக்கப்பட்டுள்ளது
பா.ஜ.கவின் வெறுப்பு அரசியல் தோற்கடிக்கப் பட்டுள்ளது. ஊழல், மதவாதம், எதேச்சதிகாரம், வெறுப்பரசியல் கொண்ட பாசிச பாஜகவை வீழ்த்திய கர்நாடக மக்களின் தீர்ப்பு, வரவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாகும். நிச்சயமாக மக்களின் தீர்ப்பு வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். பாஜக மற்றும் மோடியின் மாயத்தோற்றம் தகர்த்தெறியப்பட்டுள்ளது. பாஜகவின் வீழ்ச்சியானது தென்இந்தியாவிலிருந்து தொடங்கியுள்ளது. வெறுப்பையும் மதவெறியையும் விரட்டியடிக்க உதவிய கர்நாடக மக்களுக்கு நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தின் மீது கன்னட சகோதர்கள் வைத்துள்ள நம்பிக்கையை பொறுப்புணர்வுடன், மக்களின் நலன் சார்ந்து அமையவுள்ள காங்கிரஸ் அரசு கண்டிப்பாக நிறைவேற்றும்.
பாஜகவின் வீழ்ச்சி
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் திரு மல்லிகார்ஜுன கார்கே அவர்கள், அன்னை சோனியா காந்தி அவர்கள், அன்புத்தலைவர் திரு.ராகுல்காந்தி அவர்கள், திருமதி பிரியங்கா காந்தி அவர்கள், மாநிலத் தலைவர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் செயல்வீரர்கள் அனைவரும் இந்த வெற்றிக்காக கடுமையாக உழைத்தனர். அதனால்தான் இந்த வெற்றி சாத்தியமாகியது. இவர்களுக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள கொள்ளேகால் தொகுதி எனக்கு பொறுப்பாகக் கொடுக்கப்பட்டது. சட்டமன்ற தேர்தலில் அதிக அளவில் வெற்றி பெற்ற தொகுதிகளில் கொள்ளேகால் தொகுதியும் ஒன்றாகும். அது மட்டுமல்ல சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதியிலும் காங்கிரஸ் பேரியக்கம் வெற்றி பெற்றது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு அடித்தளம்
அன்புத்தலைவர் திரு ராகுல்காந்தி அவர்களின் இந்திய ஒற்றுமைப் பயணம் (BHARAT JODO) சென்ற கர்நாடகாவின் அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. மேலும், இந்திய ஒற்றுமைப் பயணம் தமிழகத்தில் முடிந்து கர்நாடகாவில் துவங்கும்போது, இந்திய தேசியக் கொடியை கர்நாடகாவில் என்னை ஒப்படைக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பை எனக்கு வழங்கிய காங்கிரஸ் தலைவர் திரு மல்லிகார்ஜுன கார்கே அவர்களுக்கும், அன்புத்தலைவர் திரு ராகுல்காந்தி அவர்களுக்கும், எனது நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றி பெற்ற அனைத்து காங்கிரஸ் வேட்பாளர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இதையும் படியுங்கள்
கர்நாடகாவில் எந்த கட்சிக்கு எவ்வளவு இடம்.? கடைசி நேர பரபரப்பு - ஜெயநகரில் நூலிழையில் மாறிய முடிவு