கர்நாடக தேர்தல்: சறுக்கிய பாஜக & ஜேடிஎஸ்.. காங்கிரசின் வெற்றிக்கு உதவிய டாப் 5 காரணங்கள்

By Raghupati RFirst Published May 13, 2023, 9:36 PM IST
Highlights

காங்கிரஸ் உள்ளூர் தலைமையிலான கட்சியின் பிரச்சாரம், ஊழல், உள்ளூர் பிரச்சினைகள் மற்றும் 5 வாக்குறுதிகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தி தெளிவாக வெற்றி பெற்றது.

224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த 10-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துள்ள நிலையில், காங்கிரஸ் 136 தொகுதிகளிலும் பாஜக 65 இடங்களிலும் வெற்றியை உறுதி செய்யும் நிலையில் உள்ளது. மேலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 தொகுதிகளிலும் வெற்றியை உறுதிசெய்துள்ளது.

உள்ளூர் தலைமை

கர்நாடகப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி (கேபிசிசி) மற்றும் மாநிலத் தலைவர் டி.கே. சிவக்குமார் மற்றும் முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட அதன் மூத்த தலைவர்கள் மீது காங்கிரஸ் தலைமை நம்பிக்கை வைத்தது முதல் முக்கிய காரணம் ஆகும்.

இரு தலைவர்களும் இணைந்து மாநிலத்தின் 20 மாவட்டங்களை உள்ளடக்கிய பிரஜாத்வானி யாத்திரையை (மக்களின் குரல்) வழிநடத்தினர். யாத்திரையின் போது, கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் மக்களுடன் உரையாடி, கட்சியின் தேர்தல் அறிக்கைக்கு அவர்களின் ஆலோசனைகளை கவனத்தில் எடுத்தனர்.

ஊழலுக்கு எதிரான பிரச்சாரம்

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, மாநிலத்தில் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசின் ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்தை காங்கிரஸ் தீவிரப்படுத்தியது. இது பாஜகவிற்கு எதிராக "PayCM" மற்றும் "40 சதவிகித சர்க்காரா" போன்ற பிரச்சாரங்களை நடத்தியது. கர்நாடகாவின் பல்வேறு இடங்களில் பொம்மையின் முகத்துடன் கூடிய சுவரொட்டிகள் மற்றும் ‘PayCM’ என்ற க்யூஆர் குறியீடு அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

இந்த போஸ்டர்கள் டிஜிட்டல் பேமெண்ட் நிறுவனமான Paytm இன் QR குறியீட்டை ஒத்திருந்தன. 'PayCM' QR குறியீட்டை ஸ்கேன் செய்தவுடன், அரசாங்கத்திற்கு எதிராக ஊழல் தொடர்பான புகார்களை பதிவு செய்ய சமீபத்தில் காங்கிரஸ் கட்சியால் தொடங்கப்பட்ட இணையதளத்திற்கு மக்களை அழைத்துச் சென்றது.

இதற்கிடையில், 2022 இல் உடுப்பியில் உள்ள ஒரு ஹோட்டலில் ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல் தற்கொலை செய்து கொண்ட பிறகு, "40% சர்க்காரா, பாஜக ஆண்ட்ரே பிரஷ்டாச்சாரா" தொடங்கப்பட்டது. அப்போதைய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா, பொதுப்பணித் திட்டத்துக்கு 40 சதவீத கமிஷன் கேட்டதாக பாட்டீல் குற்றம்சாட்டியிருந்தார்.

உள்ளூர் பிரச்சனைகள்

விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பில் ஊழல்கள் மற்றும் பாஜக அரசாங்கத்தின் கீழ் வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட உள்ளூர் பிரச்சனைகளை காங்கிரஸ் கிராமம் வரைக்கும் கொண்டு சென்றது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 3,000 ரூபாயும், டிப்ளமோ படித்தவர்களுக்கு மாதம் 1,500 ரூபாயும் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உறுதியளித்தார். பெலகாவியில் நடந்த பேரணியில், ஐந்து ஆண்டுகளில் மாநிலத்தில் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாகவும், கர்நாடகாவில் காலியாக உள்ள 2.5 லட்சம் பணியிடங்களை நிரப்புவதாகவும் உறுதியளித்தார்.

இதையும் படிங்க..கர்நாடக தேர்தலில் மண்ணை கவ்விய 14 அமைச்சர்கள்.. இப்படியொரு நிலைமையா.! பரிதாபத்தில் பாஜக

மல்லிகார்ஜுன கார்கே

சோலில்லாடா சாரதாரா (தோல்வி இல்லாத தலைவர்) என்று பிரபலமாக அழைக்கப்படும் மல்லிகார்ஜுன கார்கே மாநிலத்தில் தீவிர பிரச்சாரம் செய்து, கர்நாடகாவில் மொத்த மக்கள் தொகையில் 17.5 சதவீதமாக இருக்கும் தலித் வாக்காளர்களை ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்தினார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே  எட்டு முறை எம்எல்ஏவாகவும், இரண்டு முறை லோக்சபா எம்பியாகவும், ராஜ்யசபா எம்பியாகவும் இருந்துள்ளார். தேர்தலின் போது, அடிமட்ட அளவில் கட்சி இயந்திரத்தை வலுப்படுத்துவதில் அவர் கவனம் செலுத்தியதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

பாரத் ஜோடோ யாத்ரா

கர்நாடகாவில் 24 நாட்கள் பயணித்த ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை, மாநிலத்தில் காங்கிரஸின் வாய்ப்புகளை கணிசமாக உயர்த்தியதாகக் கருதப்படுகிறது. செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 23, 2022 வரை, தகுதி நீக்கம் செய்யப்பட்ட லோக்சபா எம்.பி ராகுல் காந்தி காங்கிரஸ் தொண்டர்களுடன் சேர்ந்து, மாநிலத்தில் உள்ள எட்டு மாவட்டங்கள் வழியாக 500 கிலோமீட்டர் தூரம் கடந்து, அவை அனைத்தும் காங்கிரஸின் கோட்டைகளாக இருந்தன என்றும் கூறுகின்றனர்.

பாரத் ஜோடோ யாத்ரா அடிமட்ட அளவிலான காங்கிரஸ் கட்சியினரை உற்சாகப்படுத்தியது. மக்களுடன் ராகுல் காந்தியின் உரையாடல் காங்கிரஸின் நோக்கத்தைப் புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவியது என்றும், இவைதான் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு பெரிதும் உதவிய காரணங்கள் என்றும் விவரிக்கின்றனர்.

இதையும் படிங்க..அமுதா ஐஏஎஸ் முதல் உதயசந்திரன் வரை.. வெளிநாட்டு பயணத்திற்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் மாற்றிய அதிகாரிகள் யார்?

click me!