வலுவான திமுக கூட்டணி... கானல் நீரான பாஜக வெற்றி- பதற்றத்தில் மோடிக்கு கோபம் கொப்பளிக்கிறது- செல்வப்பெருந்தகை

Published : Mar 05, 2024, 01:36 PM IST
 வலுவான திமுக கூட்டணி... கானல் நீரான பாஜக வெற்றி- பதற்றத்தில் மோடிக்கு கோபம் கொப்பளிக்கிறது- செல்வப்பெருந்தகை

சுருக்கம்

தமிழகத்திற்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் பிரதமர் மோடி இதுவரை ஒரு சல்லிக் காசு கூட வழங்கவில்லையென காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். 

பா.ஜ.க. வெற்றி கானல் நீர்

பிரதமர் மோடி தமிழகம் பயணத்தில் திமுக மற்றும் காங்கிரசை விமர்சனம் செய்திருந்தால். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவிலேயே தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி வலிமை பெற்றிருப்பதால் கடந்த தேர்தல்களில் பா.ஜ.க. வெற்றி என்பது கானல் நீராகிவிட்டதை அறிந்த பிரதமர் மோடி அடிக்கடி தமிழக சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

தமிழகத்திற்கு வரும் போதெல்லாம் கோபம் கொப்பளிக்கிறது, பதற்றம் அதிகரிக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசுக்கு எதிராக பிரதமர் பதவியில் இருக்கிறோம் என்கிற குறைந்தபட்ச நாகரீகம் கூட இல்லாமல் அவதூறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். 

வேலையில்லா திண்டாட்டம்

இந்தியாவை உலகின் மூன்றாவது தலைசிறந்த பொருளாதார நாடுகளில் ஒன்றாக மிக விரைவில் ஆக்க வேண்டுமென்று 10 ஆண்டு ஆட்சிக் காலம் முடிந்து தேர்தலை எதிர்நோக்கும் போது கூறுகிறார். கடந்த 2019 சுதந்திரதின விழாவில் உரையாற்றிய மோடி, 2024 இல் 5 டிரில்லியன் டாலராக உயர்ந்து உலகில் மூன்றாவது பொருளாதார நாடாக இந்தியாவை உயர்த்துவேன் என்று கூறினார். தற்போது அந்த இலக்கை 2025 ஆம் ஆண்டுக்கு தள்ளி வைத்திருக்கிறார்.  

வேலையில்லா திண்டாட்டம் 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 20 முதல் 24 வயது நிரம்பிய பட்டதாரிகளிடையே 44.5 சதவிகிதமும், 25 முதல் 29 வயதுள்ளவர்களிடையே 14.33 சதவிகிதமும் உள்ளது. கடந்த ஆண்டு ரயில்வே துறையில் 90,000 கீழ்நிலை பணியாளர்களுக்கு நடந்த தேர்வில் 2 கோடியே 80 லட்சம் பேர் பங்கெடுத்திருக்கிறார்கள். வேலையில்லா திண்டாட்டத்திற்கு இதை விட வேறு சான்று தேவையில்லை. 

ஒரு சல்லிக் காசு கூட வழங்கவில்லை

தி.மு.க. அரசு வெள்ள மேலாண்மையை சரிவரச் செய்யவில்லை, துயரத்தில் பங்கெடுத்துக் கொள்ளவில்லை என்று மோடி குற்றம் சாட்டியிருக்கிறார். தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 37 ஆயிரம் கோடி நிதி கேட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து முறையிட்டனர். ஜனவரி 27 ஆம் தேதிக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று உறுதி கூறினார். ஆனால் தமிழகத்திற்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் பிரதமர் மோடி இதுவரை ஒரு சல்லிக் காசு கூட வழங்கவில்லை.   மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களில் பல லட்சம் கோடி ரூபாய் கொள்ளை அடிப்பதை அனுமதிக்க மாட்டேன் என்று உரத்தக் குரலில் கூறியிருக்கிறார்.  காங்கிரஸ் கட்சி குடும்ப அரசியல் நடத்துவதாக மோடி கூறுகிறார். விடுதலை போராட்ட காலத்தில் மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவருமே ஒருகட்டத்தில் சிறையிலிருந்து விடுதலைக்காகப் போராடினார்கள். 

மத்தியில் ஆட்சி மாற்றம்

விடுதலைக்காக ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடாத பாரம்பரியத்தில் வந்த பிரதமர் மோடி விடுதலைக்காக காந்தியடிகள் தலைமையில் 60 ஆண்டுகள்  போராடிய காங்கிரஸ் பேரியக்கம் குறித்துப் பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை. 2024 மக்களவை தேர்தலில் மோடி ஆட்சியை அகற்ற தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் இந்தியா கூட்டணி அணி திரண்டு நிற்கிறது.

மக்கள் விரோத மோடி ஆட்சியை அகற்ற தலைவர் ராகுல் காந்தி தம்மை வருத்தி நடைப்பயணம் மேற்கொண்டு மக்களோடு மக்களாக அவர்களது துயரங்களைப் பகிர்ந்து கொண்டு மாபெரும் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். அவரது உழைப்பிற்குப் பலன் தருகிற வகையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மீண்டும் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒன்றிய ஆட்சியைக் கைப்பற்றுகிற காலம் வெகு தொலைவில் இல்லையென செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

வரலாறு தெரியாமல் பேசவில்லை.. திரித்து பேசுகிறார்... ஆளுநர் ரவிக்கு எதிராக சீறிய அய்யா வைகுண்டர் தலைமை பதி

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

முக்தார் மீது நடவடிக்கை வேண்டும்.. டெல்லி சென்ற கரு.நாகராஜன்.. ஜி.கே.வாசனிடம் கடிதம்!
மகளிர் உரிமைத் தொகை உயருகிறது..! எவ்வளவு தெரியுமா? முதல்வர் சொன்ன குட்நியூஸ்!