
கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் மழை பொய்த்து போனது. கடந்த ஆண்டு டிசம்பர் 12ம் தேதி ஏற்பட்ட வர்தா புயலால், ஏராளமான ஏக்கர் விவசாய நிலங்கள் முற்றிலும் சேதமானது. இதனால், தண்ணீர் இல்லாமல் விவசாயம் நொடிந்துவிட்டது.
மேலும், ஆந்திர கிருஷ்ணா நதி நீரும் போதுமான அளவுக்கு வந்து சேரவில்லை. கர்நாடக மற்றும் கேரள அரசு தண்ணீர் தர மறுப்பதோடு, எல்லையில் அணை கட்ட முனைப்பு காட்டி வருகிறது. இதையொட்டி விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொண்டனர்.
தற்போதுள்ள கோடை காலத்தில் சிறிய அளவில் தண்ணீர் இருந்தாலும், சூரிய வெப்பதால் ஆவியாகிறது. இதனால் ஆறு, குளம், குட்டை ஆகிய பகுதிகளில் தண்ணீர் இல்லாமல் வறட்சி ஏற்பட்டு பாலைவனமாக மாறிவிட்டது.
ஆற்று நீர் ஆவியாவதை தடுக்க அமைச்சர் செல்லூர் ராஜு, கடந்த சில நாட்களுக்கு முன் வைகை அணைக்கு சென்றார். அங்கு தேங்கியுள்ள தண்ணீர் ஆவியாகமால் இருக்க தெர்மாகோல் வைத்து மூடினார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் தங்களது கமன்ட்டுகளை வாரி வழங்கி வருகின்றனர். சமீபத்தில் நடந்த திரைப்பட விழாவில் பேசிய நடிகர் கமல், படம் குறித்து பேசும்போது, தெர்மாகோல் என்ற வார்த்தையை கூறினார்.
இதனால், மேலும் இதுபற்றி கமன்ட்டுகள் அதிகரித்தன. இச்சம்பவம் தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், “மானம் கப்பல் ஏறுகிறது” என்னும் பழமொழியை மிஞ்சி, “மானம் விமானம் ஏறி சீனாவுக்கே சென்று விட்டது” என்ற புது மொழி கூறும் நிலை வந்துவிட்டது.
ஆம், சீன நாட்டின் நாளிதழில், நமது தமிழக அமைச்சர் வைகை அணையில், தண்ணீர் ஆவியாகாமல் இருக்க தெர்மாகோல் வைத்த செய்தி படத்துடன் வெளியாகியுள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள், கமன்ட்டுகளை மீண்டும் வாரி இறைக்க தொடங்கிவிட்டனர்.