
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூரு சிறைக்கு சென்று இரண்டரை மாதங்கள் ஆகிறது. இன்று வரை அவரை தினமும் சந்தித்து பேசுவது, இளவரசியின் மகன் விவேக் மட்டும்தான்.
வெளியில் உள்ள தகவல்களை சசிகலாவுக்கு சொல்வதும், சசிகலா சொல்வதை, தினகரன், திவாகரன் போன்றவர்களிடம் சொல்வதும் விவேக் தான்.
இந்நிலையில், திருட்டு வழக்கில் கைதான பமீலா என்ற ஒரு பெண்மணி சசிகலாவுக்கு, ஆறுதலாக பேசிவருவதுடன், அவருக்கு சிறு சிறு உதவிகளையும் செய்து வருகிறாராம்.
சிறையில், ஓசூர் பாலகிருஷ்ணா ரெட்டி வீட்டில் இருந்து தற்போது சாப்பாடு வருவதில்லை. அதற்கு பதில், பெங்களூரில் ஒரு தனி வீடு எடுத்து, சமையல் காரர்களை அங்கேயே அனுப்பி, உணவு தயாரித்து அனுப்புகிறார்களாம்.
பத்து பேர் சாப்பிடும் அளவுக்கு உணவுகள் வந்து சேருவதால், சிறை தோழி பமீலாவுடன் அமர்ந்து சசிகலா சாப்பிட்டுவிட்டு, மீதி உணவை மற்ற கைதிகளுக்கு வழங்கி விடுகிறாராம்.
மற்றபடி, தொண்டு நிறுவனம் என்ற பெயரில், பெல்லாரி ரெட்டி சகோதரர்கள், ஏற்கனவே சிறையில் ஏர் கூலர் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுத்ததால், பெரிய அளவில் வெயில் தாக்கம் இல்லை என்றே கூறப்படுகிறது.
இருந்தாலும், தினமும் எண்ணற்ற கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள், அதிகாரிகள் என பலரது மரியாதையை பார்த்து பழகி போன சசிகலாவுக்கு, ஒரே இடத்தில் அடைந்து கிடப்பது மிகுந்த வேதனை அளிப்பதாக இருக்கிறதாம்.