
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் சிக்கியுள்ள டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோரிடம் டெல்லி போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வரும் நிலையில், தினகரன் தங்களை காட்டிக் கொடுத்து விடுவாரோ என்ற அச்சத்தில் அமைச்சர்கள் உறைந்து போயுள்ளதாக தவகல்கள் வெளியாகியுள்ளன.
தேர்தல் ஆணையத்தில் முடக்கப்பட்ட, இரட்டை இலை சின்னத்தை திரும்பப் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், சுகேஷ் சந்திரசேகர், தினகரன், அவரது நண்பர், மல்லிகார்ஜுனா ஆகியோரை, டில்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனாவை, ஐந்து நாள் போலீஸ் காவலில் விசாரிக்க, டில்லி நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதையடுத்து சென்னை, அடையாறில் உள்ள, தினகரன் வீடு மற்றும் அலுவலகத்தில், டெல்லி போலீஸ் உதவி கமிஷனர் சஞ்சய் ஷெராவத் தலைமையில், போலீசார் விசாரித்தனர்.
அங்கு கிடைத்த தகவல் அடிப்படையில், ஆதம்பாக்கத்தில் உள்ள, ஓய்வு பெற்ற பொதுப்பணித் துறை பொறியாளர் மோகனிடம், விசாரணை நடத்த, சம்மன வழங்கி உள்ளனர்.
இதனிடையே தினகரனுடன் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பில் இருந்தவர்களிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால் தமிழக அமைச்சர்கள் சிலர் அச்சமடைந்துள்ளனர்.
சசிகலா – ஓபிஎஸ் இடையேயான பிரச்சனையின்போது ,ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள அதிமுக எம்எல்ஏக்களை கூவத்துாரில் தனியார் சொகுசு விடுதியில் அடைத்து வைத்திருந்தபோது, அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டது. மேலும் அவர்களுக்கு பணம் மற்றும் தங்கம் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை சில அமைச்சர்கள்தான் செய்து கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் இரட்டை இலை விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தத சென்னை வந்துள்ள டெல்லி போலீசார் தங்கள் வீட்டிற்கும், வந்து விசாரணை நடத்துவார்களோ என்ற பயத்தில் அமைச்சர்கள் உள்ளனர் என கூறப்படுகிறது.
ஏற்கனவே, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது தொடர்பாக அச்சத்தில் இருந்த அமைச்சர்களுக்கு டெல்லி போலீசாரின் விசாரணை மேலும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.