
பிளவுபட்ட அதிமுகவின் இரு அணிகளையும் இணைப்பது குறித்து சேலத்தில் கட்சி நிர்வாகிகளுடன் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை எஃகு கோட்டையாக இருந்த அதிமுக, அவர் மறைவுக்குப் பின்னர் இரண்டாக பிளவுபட்டு நி்ற்கிறது. ஜெயலலிதா இருக்கும் வரை பவ்யம் காட்டிய மூத்த அமைச்சர்கள் இன்று வானமே அதிரும் அளவுக்கு உரக்கப் பேசி வருகின்றனர்.
சசிகலா, தினகரனை நீக்கினால் மட்டுமே பேச்சுவார்த்தை என்ற நிலைப்பாட்டில் பன்னீர் தரப்பு உறுதியாக இருந்தாலும், அவ்விருவரையும் ஆதரிப்பது என்பதில் எடப்பாடி டீம் தெளிவாக உள்ளது. சென்னையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் சசிகலாவே பொதுச்செயலாளர் என்ற பிரமாணப் பத்திரத்தில் முக்கிய நிர்வாகிகளிடம் எடப்பாடி டீம் கையெழுத்து பெற்றதாகவும் கூறப்படுகிறது.
கலங்கிய குட்டை தெளிவுவது தானே இயல்பு. ஆனால் அதிமுக விவகாரத்தில் நாளுக்கு நாள் நிமிடத்திற்கு நிமிடம் குழப்பமே அதிகரித்து வருகிறது. என்னதான் நடந்து கொண்டிருக்கிறது என்று அதிமுகவின் அடிமட்டத் தொண்டர் முதல் வெகுஜன மக்கள் வரை அனைவருமே குழம்பிப் போய் உள்ளனர்.
இந்தச் சூழலில் சேலம் சென்றுள்ள முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, முக்கிய நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது அணிகள் இணைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.