தமிழகத்தில் ஆளுமைமிக்க தலைவர் வைகோ... அமைச்சர் செல்லூர் ராஜூ திடீர் புகழாரம்!

By Asianet TamilFirst Published Dec 4, 2019, 9:37 PM IST
Highlights

திமுகவில் ஸ்டாலினை நம்பி அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மக்களைச் சந்தித்து வாக்கு கேட்க முடியாது. காமராஜருக்கு பிறகு காங்கிரஸ் இயக்கமே அழிந்ததுபோல கலைஞர் கருணாநிதி என்ற பெருமையும் ஆளுமையும் இல்லாததால் திமுகவும் அழிந்துவிடும். கருணாநிதியின் மகன் என்ற அடிப்படையில் தலைமைப் பொறுப்புக்கு ஸ்டாலின் வந்தார். அதனால், ஸ்டாலினுக்கு எவ்வாறு அரசியல் இயக்கங்களை நடத்துவது, மற்றவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்வது என்றுகூட தெரியவில்லை.
 

தமிழகத்தின் ஆளுமைமிக்க அரசியல் தலைவர் வைகோ மட்டுமே என்று தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.


மதுரை விமான நிலையத்தில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ  செய்தியாளர்களைச் சந்தித்தார். “இந்தியாவிலேயே மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக கடனை தமிழக அரசு வழங்கியுள்ளது. இதற்காக வழங்கப்பட்ட விருதை அதிமுக அரசு 2-வது முறையாக வென்றுள்ளது. ஏற்கனவே 2015-ல் ஜெயலலிதா  ஆட்சியின்போது பெற்றோம். திமுகவை பொறுத்தவரையில் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள தயாராக இல்லை. அதனாலேயே அதனுடைய தோழமை கட்சிகளையும் தற்போது தூண்டிவிட்டு பல்வேறு வழக்குகளை போட்டு வருகிறது.


திமுகவில் ஸ்டாலினை நம்பி அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மக்களைச் சந்தித்து வாக்கு கேட்க முடியாது. காமராஜருக்கு பிறகு காங்கிரஸ் இயக்கமே அழிந்ததுபோல கலைஞர் கருணாநிதி என்ற பெருமையும் ஆளுமையும் இல்லாததால் திமுகவும் அழிந்துவிடும். கருணாநிதியின் மகன் என்ற அடிப்படையில் தலைமைப் பொறுப்புக்கு ஸ்டாலின் வந்தார். அதனால், ஸ்டாலினுக்கு எவ்வாறு அரசியல் இயக்கங்களை நடத்துவது, மற்றவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்வது என்றுகூட தெரியவில்லை. எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவர் அரசை குறை கூறிக்கொண்டே இருக்கிறார். அனைவரையும் ஸ்டாலின் ஒருமையில் பேசுகிறார். அவரை ஏற்றுக்கொள்ள மக்கள் தயாராக இல்லை.” என்று செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் குறித்து நாடாளுமன்றத்தில் வைகோ பேசியது பற்றி செல்லூர் ராஜூவிடம் செய்தியாளர்கள் கேவி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த செல்லூர் ராஜூ, “திமுகவில் இணைந்து வைகோ நினைத்ததை சாதித்துவருகிறார். திமுகவை வெளியிலிருந்து அசைக்க பார்த்தார் வைகோ. ஆனால், ஒன்றும் அசைக்க முடியவில்லை. தமிழகத்தில் ஆளுமை திறன் அதிகம் உள்ள அரசியல்வாதி என்றால் அது வைகோதான். எனவே, அவருடைய அரசியல் தலைமைக்கு வாழ்த்து கூறுகிறேன். ஊழல் மிகுந்த குடும்பம் என்றும் மு.க. ஸ்டாலின் ஆட்சி அமைக்க தகுதி இல்லை என்று வைகோ கூறி வந்தார். தற்போது அவர் ஸ்டாலினுடைய ஊதுகுழலாக மாறிவிட்டார்” என்று செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

click me!