மீண்டும் காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் !! இதுதான் காரணமாம் !!

By Selvanayagam PFirst Published Dec 4, 2019, 8:48 PM IST
Highlights

தேர்தலில் தொடர்ந்து வெற்றி கிடைப்பதால் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை மீண்டும் ஏற்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத்துக்கு கடந்த ஏப்ரல்-மே மாதங்களில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. குறிப்பாக 80 தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ரேபரேலி தொகுதியில் மட்டுமே வெற்றி கிடைத்தது.

காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல்காந்தி, தனது குடும்பத் தொகுதியான அமேதி தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மிக மோசமான தோல்வியைத் தழுவினார். இது அவரிடம் கடும் அதிருப்தியையும் விரக்தியையும் ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து அவர் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். மூத்த இதையடுத்து காங்கிரஸ் கட்சிக்கு தலைமை பொறுப்பை சோனியா ஏற்றார். அவருக்கு உடல் நலம் சரி இல்லாததால் கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட முடியாத நிலை உள்ளது.

இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நடந்து வரும் இடைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி கிடைத்தது. குறிப்பாக மராட்டியம், அரியானா மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களில் பாரதீய ஜனதா கட்சியால் தனி பெரும் பான்மை பலத்தை பெற முடியவில்லை.

அரியானாவில் தம்மை எதிர்த்து போட்டியிட்ட மாநில கட்சியான ஜே.ஜே.பி. கட்சியுடன் சேர்ந்து பாஜ.க. ஆட்சி அமைத்துள்ளது. மராட்டியத்தில் சிவசேனா கூட்டணியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியுடன் கை கோர்த்து இருப்பதால் அங்கு எதிர்க்கட்சி வரிசையில் அமர வேண்டிய நிலை பாரதீய ஜனதாவுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த அரசியல் மாற்றங்கள் காங்கிரஸ் கட்சி தலைவர்களிடம் மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் தற்போது நடந்து வரும் சட்டசபை தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான சூழ்நிலை உருவாகி உள்ளது.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ள காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று கருத்து கணிப்புகள் மூலம் தெரிய வந்துள்ளது. சி-வோட்டர் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில், “ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள பாரதீய ஜனதா மீண்டும் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு இடங்கள் கிடைக்காது” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த தகவல்  ராகுல்காந்திக்கு புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது. எனவே அவர் தனது வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்து விட்டு ஜார்க் கண்ட் மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் இந்த மாத இறுதியில் வெளியாக உள்ளன. அதில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றால் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட ராகுல் திட்டமிட்டுள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியையும் மீண்டும் ஏற்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

click me!