தமிழக எல்லைக்குள் நுழைந்து வெறியாட்டம். கன்னட சலுவாலி வாட்டாள் வாலை சுருட்டிக்கோ.. சீமான் எச்சரிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Jan 13, 2021, 12:52 PM IST
Highlights

மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, தமிழகம் தன்னுடைய நிலப்பகுதியைப் பெருமளவில் இழந்தது. அதன் விளைவாகவே, காவிரி நதிநீர், முல்லைப்பெரியாறு அணை, பாலாறு உள்ளிட்டத் தென்னக நதிநீர் சிக்கல்களில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டது. 

எல்லைப்பகுதிகளில் கன்னட இனவெறியர்கள் அத்துமீறி நுழைந்து பெயர்ப்பலகைகளிலுள்ள தமிழெழுத்துக்களை அழித்தால் கடும் எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்: 

ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப்பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக அமைக்கப்பட்டிருந்த தமிழ்ப்பெயர்ப்பலகைகளிலுள்ள தமிழெழுத்துக்கள் கன்னட இனவெறியர்களால் அழிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. எல்லைத்தாண்டி தமிழகப்பகுதிக்குள் அத்துமீறி வந்து நிகழ்த்தப்பட்ட இத்தகைய அட்டூழியங்கள் வன்மையான கண்டனத்திற்குரியது. கர்நாடகாவைச் சேர்ந்த கன்னட சலுவாலியா அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையிலான 30 க்கும் மேற்பட்ட கன்னட இனவெறியர்கள் தமிழக எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தமிழில் எழுதப்பட்ட பெயர்ப்பலகைகளைச் சேதப்படுத்துவதையும், தமிழெழுத்துக்களை அழிப்பதையும் தமிழகக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அவர்களைக் கைதுசெய்யாது விட்டது தமிழக அரசின் மெத்தனப்போக்கையே காட்டுகிறது. 

தமிழ்மொழியை மீட்சியுறச் செய்து, இனத்தை மீள்கட்டமைப்புச் செய்ய, இம்மண்ணின் பிள்ளைகள் முன்வைக்கும் அறம் சார்ந்த மண்ணுரிமை அரசியலை இனத்துவேசமெனவும், மொழிவெறியெனவும் பழிசுமத்த முனைவோரெல்லாம், கன்னட இனவெறியர்களின் இத்தகைய இழிசெயலை என்னாவாக மதிப்பிடுகிறார்கள்? சனநாயகத்தையும், மாண்பையும் பற்றி தமிழர்களுக்குப் பாடமெடுக்கிற பெருமக்கள் யாவரும் இத்தகைய அத்துமீறல் போக்குகளைக் கண்டிக்காது கனத்த மௌனம் சாதிப்பதன் அரசியலென்ன? இதேபோன்றதொரு வஞ்சகம் நிறைந்த கொடுஞ்செயலை தமிழர்கள் எவராவது கர்நாடகா எல்லைக்குள் சென்று செய்திருந்தால் எத்தகைய எதிர்வினையைக் கர்நாடக மாநிலம் செய்திருக்கும்? என்பதை அறிவார்ந்த சமூக மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இத்தகைய இழிநிலையைப் போக்கவே இன உணர்வை முன்னிறுத்திய தமிழ்த்தேசிய இனத்தின் துயர்போக்கும் மாற்று அரசியலை தமிழ்த்தேசியர்கள் நாங்கள் முன்வைக்கிறோம்.

 

மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, தமிழகம் தன்னுடைய நிலப்பகுதியைப் பெருமளவில் இழந்தது. அதன் விளைவாகவே, காவிரி நதிநீர், முல்லைப்பெரியாறு அணை, பாலாறு உள்ளிட்டத் தென்னக நதிநீர் சிக்கல்களில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டது. பெருந்தமிழர்கள் ஐயா ம.பொ.சி அவர்களின் முயற்சியால் வடக்கெல்லையும், ஐயா மார்ஷல் நேசமணி அவர்களின் முயற்சியால் தெற்கெல்லையும் ஓரளவு மீட்டுக் காக்கப்பட்டதென்றாலும், தமிழகம் தனது எல்லைப்பகுதிகளைச் சரிவரத் தற்காக்கத் தவறியதன் விளைவுகளை 60 ஆண்டுகளைக் கடந்தும் இன்றளவும் தமிழர்கள் எதிர்கொண்டு வருகிறோம். இவ்வாறு பெருந்தன்மையாலும், பரந்த மனப்பான்மையாலும் எண்ணற்ற இழப்புகளைச் சந்தித்து நிற்கிற வேளையிலும், தமிழகத்தில் வாழும் பிறமொழி தேசிய இன மக்களை உறவுகளாக எண்ணி ஆரத்தழுவி நேசித்து வரும் தமிழர்களின் இன உணர்வை உரசிப்பார்ப்பது போல நிகழ்ந்தேறும் இனவெறியாட்டங்களும், அத்துமீறல் போக்குகளும் இனியும் தொடர்ந்தால் அது பெரும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கிறேன். 

ஆகவே, இதுபோன்ற இனவெறிச்செயல்கள் தமிழ் மண்ணில் நடைபெறத் துளியளவும் அனுமதித்திடக் கூடாது எனவும், தாளவாடி மலைப்பகுதியில் தமிழெழுத்துக்களை அழித்த கன்னட அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். என அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

 

click me!