
மின் உற்பத்தி செய்ய முதலீடு செய்யாமல், கமிஷனுக்காக மின்சாரம் வாங்குவதிலேயே அரசு குறியாக இருக்கிறது, இதுவே மின்வெட்டுக்கு காரணம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார். மாற்று வழிகளில் மின்சாரம் உற்பத்தி குறித்து சிந்திப்பது இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். எருமை மாடும் கருப்புதான் என திராவிடத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பேசி பேச்சுக்கு சீமான் தன் தலை முடியை காட்டி இதுவும் கருப்புதான் என கூறியுள்ளார்.
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் 57-வது நினைவு நாளை ஒட்டி அவரது திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பாரதிதாசனுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் பல்வேறு கேள்விகள் முன் வைக்கப்பட்டது, அப்போது திராவிடத்தை எருமைமாடு உடன் ஒப்பிட்டு பேசியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், திராவிடன் என்பதற்கு நான் எந்த முகமூடியும் போட்டுக்கொள்ள விரும்பவில்லை. அண்ணாமலையும் தன்னை கருப்பு திராவிடம் என்கிறார். அதனால்தான் இருவரையும் விட எருமை தான் கருப்பு என நான் கூறினேன்.
பனைமரம் மயில், குயில் உழைக்கும் மக்கள் என அனைத்தும் கருப்புதான் எனக் கூறிய அவர், தனது தலையில் கைவைத்து முடியை தொட்டு இதுவும் கருப்புதான் என்றார். நான் கருப்பு திராவிடன் என அண்ணாமலை கூறுவதற்கு ஸ்டாலின், கி.வீரமணிதான் பதில் அளிக்க வேண்டும். ஆரியர்களே தங்களை திராவிடர்கள் என கூறினாள் என்ன செய்வது? பெரியார் சமாதியில் சண்டையிட்டு கொள்வதா? என கேள்வி எழுப்பிய அவர், எல்லா சாதியினரும் அர்ச்சகராகலாம் என கூறுகிறார்கள் முதலில் என்னை கோவிலில் இருந்து வெளியேற்றியது யார் என்றும், ஸ்டாலின் இதற்கு பதில் சொல்ல முடியுமா எனவும் கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி பாஜக என கூறுகிறார்கள். நான் தமிழகத்தில் மூன்றாவது கட்சியாக இருக்க விரும்பவில்லை. முதல் கட்சியாகவே இருக்க விரும்புகிறேன் என்றார்.
நேற்று இரவு முதல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. ஜப்பான் கடல் அலையில் இருந்து மின்சாரம் தயாரிக்கிறது, காற்றில் இருந்து மின்சாரம் தயாரிக்கிறது, ஆனால் தமிழகத்தில் இந்தியாவில் இதுபோன்ற திட்டங்கள் இல்லை. தமிழகத்தில் மின்வெட்டு காரணம் மின்சாரம் வாங்குவதற்கு முதலீடு செய்யப்படுகிறதே தவிர உற்பத்தி செய்வதற்கு முதலீடு செய்யப்படுவதில்லை. மாற்று வழிகளில் மின்சாரம் தயாரிப்பது குறித்து சிந்திப்பது இல்லை என்றார். சிதம்பரம் கோயில் கட்டியது என் அப்பன், என் முப்பாட்டன் என் தாத்தன் ஆனால் இன்றைக்கு தீட்சிதர்கள் அங்கு செய்யும் அக்கிரமத்தை பார்த்தீர்களா எனவும் கேள்வி எழுப்பினார். தமிழர்களுக்கு கடவுள் இல்லை ஆனால் எங்கள் மூதாதையர்களை வணங்கும் தெய்வம் இறைநம்பிக்கை உண்டு என்றார்.