
இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கறுப்புப்பணத்தை ஒழிக்கவேண்டும் என்ற பிரதமர் மோடியின் அவசர முடிவால் நாட்டு மக்கள் அத்திவாசிய தேவைகளுக்குக்கூட பணமில்லாது அல்லாடிக்கொண்டிருக்கிறார்கள்.
நாட்டிலுள்ள 130 கோடி மக்களும் இதன்மூலம் நேரடியாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இது எதையுமே அறியமுடியா மாய உலகிலிருக்கும் நமது பிரதமர், ஊழல் செய்தவர்கள் எல்லாம் வங்கி வாசலிலே நிற்பதாகவும் ஏழைகள் நிம்மதியாக உறங்குவதாகப் பிதற்றியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 5 நாட்களில் மட்டும் இதுவரை 16 பேர் பலியாகியிருக்கிறார்கள். ஆனால், நமது பிரதமரோ இது எதனையும் சிறிதும் கவனத்திற்கொள்ளாமல் உண்மைக்கு மாறாகப் பேசி கட்டமைக்க முயல்வது மிகுந்த கண்டனத்திற்குரியது .
தனது தான்தோன்றித்தனமான முடிவால் நாடு முழுமைக்கும் மக்களிடம் ஏற்பட்டிருக்கும் எதிர்ப்பலையைச் சமாளிக்கவே மேடையில் கண்ணீர் சிந்தி, வீட்டைத் துறந்து தான் வாழ்வதாகக் கூறி நாடகமாடி நடிப்புத் திறமையை வெளிக்காட்டுகிறார் பிரதமர் மோடி.
இந்நாடு பல நடிகர்களை அரசியல்வாதிகளாக உருவாக்கியும் பல அரசியல்வாதிகளின் நடிப்பையும் பார்த்து வருகிறது. ஆகவே பிரதமர் மோடி அவர்கள் இதை எல்லாம் கைவிட்டுக் கறுப்புப்பணத்தை மீட்பதற்கான ஆக்கப்பூர்வமான வேலையைத் தொடங்கட்டும்.
நாட்டின் பொருளாதாரக்கொள்கையில் எவ்வித மாற்றமும் செய்யாது, ஒட்டுமொத்தமாக அனைத்துத் துறைகளையும் தனியாருக்குத் தாரைவார்க்கும் தனியார் மய, தாராளமய கொள்கையைக் கடைபிடிக்கும் அரசு, தனிப்பட்ட முதலாளிகளிடம் கறுப்புப் பணம் சேர்கிறது என்று பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.
தனியார் முதலாளிகள் லாபத்தேவைக்கு வருவார்களா மக்கள் சேவைக்கு வருவார்களா என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். ஒரு நாட்டின் உயிர்நாடியான கல்வியை மருத்துவத்தைத் தனிப்பெரும் முதலாளிகளில் கையில் கொடுத்துவிட்டு, மனிதன் வாழ உயிர்நாடியான தண்ணீரை விற்பனைக்குக் கொண்டுவந்துவிட்டு வெறும் ரூபாய் தாளை மாற்றுவதன் மூலம் எதனையும் சாதிக்க முடியாது. தனியார்மயத்தைத் தளர்த்தி, தாராளமயத்தைத் தளர்த்தி, தற்சார்பு பொருளாதாரக் கொள்கையைக் கொண்டு வந்து, மண்ணின் வளம் மக்களுக்கானது என்ற நிலை வரும் பொழுது தான் இந்நாட்டில் சமநிலை சமுதாயம் உருவாகி கருப்புப்பணம் ஒழியும் என சீமான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.