அண்ணா வழியில் திமுக அரசும் இதை கையில் எடுக்க வேண்டும்... எழுவர் விடுதலைக்கு சீமான் கொடுத்த ஐடியா...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 11, 2021, 2:58 PM IST
Highlights

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேராறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேராறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்க வைக்கப்பட்டு, 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் செய்யாத குற்றத்திற்காகக் கொடுஞ்சிறைவாசத்தை அனுபவித்து வரும் தம்பி பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே உலகெங்கும் பரவி வாழும் ஒட்டுமொத்த தமிழர்களின் ஒற்றைப்பெருவிருப்பமாக இருக்கிறது.

ஆகவேதான், எழுவர் விடுதலை என்பது இனத்தின் விடுதலை எனும் தார்மீக முழக்கத்தை முன்வைத்துப் போராடுகிறோம். 
மக்களால் தேர்வு செய்யப்பட்ட அமைச்சரவையின் முடிவை மக்களால் தேர்வு செய்யப்படாத ஆளுநர் தடுத்து முட்டுக்கட்டையிடுவது மக்களாட்சித் தத்துவத்தையே சீர்குலைக்கும் கொடுஞ் செயல்; வெளிப்படையாக நிகழ்ந்தேறும் சனநாயகப்படுகொலை! ஆகவே, தமிழ்நாடு அரசு இவ்விவகாரத்தில் சீரியக் கவனமெடுத்து, மாநிலத்தின் அதிகாரத்தை குடியரசுத்தலைவருக்குத் தாரைவார்த்து செய்த தவறை சரிசெய்துகொள்ள, 161வது சட்டப்பிரிவின்படி உடனடியாகத் தீர்மானம் நிறைவேற்றி, அரசியல் அழுத்தத்தின் வாயிலாகவும், சட்டநெருக்கடியின் மூலமாகவும் அதற்கு ஒப்புதலைப்பெற்று.

மாநிலத்தின் தன்னாட்சியையும், தன்னுரிமையையும் நிலைநாட்ட வேண்டும் எனவும், அறிஞர் அண்ணாவின் வழியில் ஆட்சி நடத்துவதாகக் கூறும் திமுக, அண்ணாவின் உயிலென வர்ணிக்கப்படும் மாநிலத் தன்னாட்சிக்கு உயிரூட்ட எழுவர் விடுதலையை விரைந்து சாத்தியப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன். மேலும், விடுதலையைச் சாத்தியப்படுத்தும் இவ்விடைப்பட்ட காலத்தில் மாநில அரசிடமிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, எழுவருக்கும் நீண்ட சிறைவிடுப்பை அளிக்க வேண்டுமெனவும் கோருகிறேன் என தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். 

click me!