திமுக நாம் தமிழர் கட்சியை எதிர்க்கிறது என்றால் நாங்கள் பெரிய ஆளாகி இருக்கிறோம் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி இருக்கிறார்.
கோவை: திமுக நாம் தமிழர் கட்சியை எதிர்க்கிறது என்றால் நாங்கள் பெரிய ஆளாகி இருக்கிறோம் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி இருக்கிறார்.
undefined
திமுகவுக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எப்போதும் ஆகாது. அதிலும் கடந்த சில நாட்களாக இவ்விரு கட்சியினர் மக்கள் முன்னிலையில் மோதிக் கொள்வது பெரும் விவாதமாக உருவெடுத்து இருக்கிறது.
குறிப்பாக தருமபுரியில் நாம் தமிழர் கட்சியினர் பேசிய பேச்சுகள், மேடையில் ஏறி திமுகவினர் செய்த ரகளை என அதற்கான பின்னூட்டம் இன்னமும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. சீமான் பேசும் பேச்சுகள் தரம் தாழ்ந்தவையாக இருக்கின்றன, அவரின் கட்சியினரும் அப்படித்தான் ஒரு பக்கமும், திமுக எப்போதும் இப்படித்தான் வன்முறையை கையில் எடுப்பவர்கள் என்று மறு பக்கமும் விவாதங்கள் நீண்டு கொண்டே செல்கின்றன.
இந் நிலையில் கோவையில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. சிறையில் 10 ஆண்டுகளை கடந்து வாடும் இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்த ஆர்ப்பாட்டம் முன் எடுக்கப்பட்டது.
அப்போது செய்தியாளர்களிடம் சீமான் பேசியதாவது: சிறையில் இருக்கும் இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்யுமாறு தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். 10 ஆண்டுகளை கடந்தவர்களை விடுவிக்க முடிவு செய்தால் ராஜிவ் கொலை மற்றும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க மறுப்பு தெரிவிக்கின்றனர்.
அண்ணாவின் பிறந்த நாளில் விடுவிக்கப்பட்டவர்களில் ஒருவர் கூட இஸ்லாமியர் கிடையாது. தேர்தல் நேரத்தில் எழுவர் விடுதலை பற்றி பேசுகின்றனர், பின்னர் அவர்களை விடுவிப்பது இல்லை. மனிதம் பார்த்து அவர்களை விடுவிக்க வேண்டும்.
நாம் தமிழருக்கு எதிராக திமுக போராடுவது எங்களுக்கும் பெருமை தான். திமுக எதிர்க்கும் அளவுக்கு நாங்கள் பெரிய ஆளாகி இருக்கிறோம். தரக்குறைவாக பேசுவதை பற்றி திமுக பேசக்கூடாது. சின்னம்மாவை அம்மாவாக்க போகிறேன் என்று பேசியவர்கள் திமுக. ஓர் அரசு சரியாக இருந்துவிட்டால் யாரும் பேச போவது கிடையாது என்று சீமான் கூறினார்.
சீமானின் பேட்டி இப்படி இருந்தாலும் மற்ற கூட்டங்களில் பெண்களையும், குழந்தைகளையும் அருகில் நிறுத்திக் கொண்டு பேசாதவர் கோவை கூட்டத்தில் மட்டும் குழந்தைகளையும், பெண்களையும் அருகில் நிறுத்தி வைத்து கொண்டு பேசியிருக்கிறார் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஒரு வேளை திமுக உறுப்பினர்கள் அத்துமீறி அராஜகத்தில் இறங்கினால் குழந்தைகளையும், பெண்களையும் முன்னிறுத்தி காப்பாற்றி கொள்ளவே இப்படி செய்கிறார் சீமான் என்று கருத்துகளும் முன் வைக்கப்படுகின்றன.