பகை மறந்த சீமான்.. விஜய் சேதுபதியை வாழ்த்தி அறிக்கை.. குழப்பத்தில் தம்பிகள்.

By Ezhilarasan BabuFirst Published Oct 26, 2021, 1:58 PM IST
Highlights

சிறந்த துணை நடிகருக்கான விருதினைப் பெற்றுள்ள தம்பி விஜய்சேதுபதி, சிறந்த ஒலிக்கலவைக்கான விருதுபெற்ற சகோதரர் ரசூல் பூக்குட்டி மற்றும் குழந்தை நாகவிஷால் 

இந்தியாவின் திரைத்துறையில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், சிறந்த நடிகருக்கான விருது பெற்ற தனுஷ், மற்றும் இதர நடிகர்களை பாராட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் சிறந்த துணை நடிகருக்கான விருது பெற்ற நடிகர் விஜய் சேதுபதியையும் அவர் பாராட்டி வாழ்த்து கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சிக்கும் நடிகர் விஜய் சேதுபதிக்குமிடையே கருத்து மோதல் இருந்து வரும் நிலையில், சீமான் விஜய்சேதுபதியை பாராட்டு இருப்பது பலரின்கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

ஆண்டுதோறும் சிறந்த நடிகர், நடிகை மற்றும் பிராந்திய திரைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் தேசிய விருதுகளைவழங்கி மத்திய அரசு திரைக் கலைஞர்களை கௌரவித்து வருகிறது. 2019 ஆம் ஆண்டிற்கான 61வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த மார்ச்சில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படும் தாதா சாகேப் பால்கே நினைவாக ஆண்டுதோறும் விருது வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு அந்த விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் சிறந்த நடிகருக்கான தேசிய விருது அசுரன் படத்தில் நடித்ததற்காக தனுஷுக்கு வழங்கப்பட்டது, பல்வேறு தமிழ் நடிகர்களும் விருது பெற்றுள்ளனர். அந்த வரிசையில் நடிகர் விஜய் சேதுபதி சிறந்த துணை நடிகருக்காக விருது பெற்றுள்ளார். அவருக்கு சீமான் தனது அறிக்கையில் வாழ்த்து கூறியிருப்பது பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. இருவருக்கும் இடையே நிலவி வரும் கருத்து மோதலே அதற்கு முக்கிய காரணம் ஆகும்.

என்னதான் பிரச்சனை: 

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படமான 800 என்ற நிரைப்படத்தில் முரளிதரனாம வேடம் ஏற்று நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி இருந்தார். தமிழ் இன துரோகியான முத்தையா முரளிதரனின் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்ததார். இதனால் பல்வேறு தமிழ் அமைப்புகளும் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் அப்படத்தை விட்டு விலகும் நிர்பந்தம் விஜய் சேதுபதிக்கு ஏற்பட்டது. இதனை அடுத்து நாம் தமிழர் கட்சிக்கும் விஜய் சேதுபதிக்கும் இடையான கருத்து மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள துக்ளக் தர்பார் என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜூலை மாதத்தில் வெளியானது, டீஸரும் வெளியானது, முழுக்க முழுக்க அரசியல் படமான அதில், பார்த்திபனுக்கு (சீமான்) ராசிமான் என பெயரிடப்பட்டுள்ளது, அவரது கட்சியின் சார்பாக ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டரில் அவ்வாறு எழுதப்பட்டுள்ளது. 

அந்த கட்சியின் போஸ்டரில் சிவப்பு, மஞ்சள், சிவப்பு என நாம் தமிழர் கட்சியின் பிரதான வண்ணத்தை ஒத்துள்ளதுள்ளது. அதில் புலி இருக்கும் வரை உங்கள் புகழ் இருக்கும் என்று எழுதப்படுகிறது, அதேபோல டீசரின் இறுதிக்காட்சியில் " எப்படினாலும் நீங்க என்னை சும்மா விடப்போவதில்லை, அதனால நானும் உங்கள சும்மா விடுவதா இல்லை, வாங்கல நேரடியா மோதி பார்ப்போம் என்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளன, அதாவது விஜய்சேதுபதி முரளிதரன் வாழ்க்கையை வரலாற்று படமான 800 படத்தில் நடிக்க கூடாது என்று சீமான் தீவிரமாக குரல் கொடுத்ததால், அவரை எதிர்க்கும் வகையில் விஜய்சேதுபதி இறங்கியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.

இதற்கு மத்தியில் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருந்த விஜய் சேதுபதியிடம், நீங்கள் தமிழரே இல்லை என்று சொல்கிறார்களே அவர்களுக்கு என்ன பதில் என செய்தியாளர் கேட்டதற்கு, மிக மோசமான ஒரு வார்த்தையை விஜய் சேதுபதி பயன்படுத்தி இருந்தார். அது நாம்தமிழர் தம்பிகளை கொந்தளிப்படைய வைத்தது. நாம் தமிழர் தரப்பில் இருந்து விஜய்சேதுபதிக்கு கடுமையான எதிர்ப்புக் குரல் எழுந்துள்ளது. ஆனால் தற்போது சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், விஜய் சேதுபதிக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சீமான் அறிக்கை: 

இந்தியாவின் மிக உயரிய திரை விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ள தமிழ்நாட்டின் உச்சத் திரைநட்சத்திரம் மதிப்பிற்குரிய சகோதரர் ரஜினிகாந்த் அவர்களுக்கும், சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதினைப் பெற்றுள்ள என் அன்புத்தம்பி வெற்றிமாறன் அவர்களுக்கும், சிறப்பு தேசிய விருதினைப் பெற்றிருக்கும் சகோதரர் பார்த்திபன் அவர்களுக்கும், எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அதேபோன்று சிறந்த நடிகருக்கான விருதினைப் பெற்றுள்ள தம்பி தனுஷ், சிறந்த இசையமைப்பாளருக்கான விருதினைப் பெற்றுள்ள தம்பி இமான், சிறந்த துணை நடிகருக்கான விருதினைப் பெற்றுள்ள தம்பி விஜய்சேதுபதி, சிறந்த ஒலிக்கலவைக்கான விருதுபெற்ற சகோதரர் ரசூல் பூக்குட்டி மற்றும் குழந்தை நாகவிஷால் ஆகியோருக்கும் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கின்றேன். விருதுபெற்ற அனைவரும் தொடர்ந்து இதுபோன்று சிறந்த படைப்புகள் கொடுத்து, தமிழ்த் திரைக்கலைத்துறையில் மேலும் பல சாதனைகள் புரியவும், இன்னும் பல உயரிய விருதுகள் வென்று, புகழும் பெருமையும் பெறவேண்டுமென உள்ளன்போடு விழைகிறேன் என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

click me!