தொழிலாளர்கள் உரிமைகளைக் குழிதோண்டிப் புதைக்கும், 'தொழிற்சாலைகள் சட்டத்திருத்த வரைவினை' தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
தொழிலாளர் சட்டம்
தொழிலாளர்களை உரிமைகளை பறிக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டமசோதாவை தமிழக அரசு திருப்ப பெற வேண்டும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 12.04.2023 அன்று தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில், 'தமிழ்நாடு தொழிற்சாலைகள் சட்டத்தில்' புதிய திருத்தங்களை மேற்கொள்ளும் சட்ட வரைவினை திமுக அரசு விவாதமின்றி நிறைவேற்றியுள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. பன்னாட்டுப் பெருமுதலாளிகளின் இலாபத்தேவையை மட்டுமே கருத்திற்கொண்டு செய்யப்பட்டுள்ள இச்சட்டத்திருத்தங்களின் மூலம், தமிழ்நாட்டுத் தொழிலாளர்களின் உரிமைகளை அடகு வைக்க முயலும் திமுக அரசின் தொழிலாளர் விரோதப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.
திமுக கூட்டணியில் தான் விசிக பயணிக்கிறது - திருமாவளவன் விளக்கம்
வேலை நேரம் அதிகரிக்க வாய்ப்பு
தமிழ்நாட்டுத் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் விதமாக, 'தொழிற்சாலைகள் சட்டத்திருத்த வரைவு' திமுக அரசால் சட்டப்பேரவையில் விவாதமின்றிக் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்புதிய சட்டத்திருத்த வரைவானது, தொழிலாளர்களின் வேலை நேரம், கூடுதல் வேலை நேரம், கூடுதல் வேலை நேரத்திற்கான ஊதியம், கூடுதல் வேலைக்கான விடுமுறை, ஓய்வு நேரம் போன்ற தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைத் தீர்மானிக்கும் 'தமிழ்நாடு தொழிற்சாலைகள் சட்டத்தின்' பிரிவு 51 முதல் 59 வரையிலான விதிகளிலிருந்து ஒரு நிறுவனத்திற்கோ, குழுமத்திற்கோ அல்லது குறிப்பிட்ட தொழிற்பிரிவிற்கோ விலக்களிக்க தமிழ்நாடு அரசிற்கு அதிகாரமளிக்கிறது. இதன்மூலம் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக மாற்றுவது உள்ளிட்ட தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்து அவர்களது குருதியைக் குடிக்கும் முதலாளித்துவத்திற்கு ஆதரவான கொடுங்கோன்மையாகும்.
பாஜக அரசை போல் திமுக அரசு
மக்களாட்சியில், ஓர் அரசு தம்மைத் தேர்ந்தெடுத்த மக்கள் மீது கொண்டுவரப்படும் யாதொரு சட்டத்திலும் உள்ள நிறைகுறைகளையும், சாதக, பாதகங்களையும் விவாதிக்கவே நாடாளுமன்றமும், சட்டமன்றங்களும் அமைக்கப்பட்டன. ஆனால், இந்திய ஒன்றியத்தை ஆளும் மோடி அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற கடந்த 9 ஆண்டுகளில் விவாதம் ஏதுமின்றிக் குறுக்கு வழியில் பல்வேறு மக்கள் விரோதச் சட்டங்களை நிறைவேற்றி பெருங்கோடுமை புரிந்துள்ளது. பாஜகவைக் கடுமையாக எதிர்ப்பதாகக் கூறும் திமுக அரசும், மோடி அரசினை போலவே விவாதமின்றி அவசரகதியில் தற்போது 'தொழிற்சாலைகள் விதிகளுக்கான வரைவுத் திருத்தங்களை நிறைவேற்றியுள்ளது நூற்றாண்டு காலமாகத் தொழிலாளர்கள் போராடிப்பெற்ற உரிமைகளை நொடிப்பொழுதில் நீர்த்துப்போகச் செய்யும் வரலாற்றுப் பெருந்துரோகமாகும்.
கருத்து கேட்காதது ஏன்.?
திமுக அரசு இப்புதிய சட்டத்திருத்தம் கொண்டுவருவது குறித்து அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைத்துக் கருத்து கேட்காதது ஏன்? இந்திய ஒன்றிய அளவில் தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் 'தொழிலாளர் சட்டத் தொகுப்பை நாடாளுமன்றத்தில் அவசரகதியில் நிறைவேற்றிய மோடி அரசு, தொழிற்சங்கங்களின் கடும் எதிர்ப்பால் அதனை நடைமுறைப்படுத்த முடியாமல் தாமதித்து வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தை ஆளும் பாஜக அரசு, கடந்த மாதம் மாநில அளவில் மோடியின் 'தொழிலாளர் சட்டத்தொகுப்பின் கூறுகளை அடிப்படையாகக் கொண்டு புதிய திருத்தச்சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
பாஜகவின் தமிழக மாடல்
அதனை அப்படியே அடியொற்றி, அதே போன்றதொரு சட்டத்திருத்தத்தை திமுக அரசும் நிறைவேற்றி, மோடி அரசு நடைமுறைப்படுத்துவதற்கு முன்பாகவே தொழிலாளர் விரோத சட்டத்தொகுப்பினை தமிழ்நாட்டில் செயல்படுத்த திமுக அரசு முயல்வதிலிருந்தே, 'திமுகவின் திராவிட மாடல்' என்பது 'பாஜகவின் தமிழ்நாட்டு மாடல்தான்' என்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆகவே, பன்னாட்டுப் பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக, தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ள 'தொழிற்சாலை சட்டத்திருத்த வரைவினை’ திமுக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துவதாக சீமான் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
டிடிவி.தினகரனின் வலது கரத்தை தட்டித்தூக்கிய இபிஎஸ்... காலியாகும் அமமுகவின் கூடாராம்