பிரதமர் மோடி தமிழின் தொன்மை குறித்து உலக நாடுகளில் பேசி விட்டதாக பெருமைகொள்ளும் அண்ணாமலை தமிழக பாஜக தலைவர்கள், தமிழர் நிலத்தில் தமிழர் கட்டிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தக்கூடாது என்று தடுத்து கொலைவெறித்தாக்குதலில் ஈடுபட்டுள்ளதற்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழில் கோயில் குடமுழுக்கு
கோயில் குடமுழுக்கு தமிழில் நடத்த எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட பாஜகவினரை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று (28.06.2023) காலை நடைபெற்றுவரும் ஓசூர் சந்திரசூடேசுவரர் திருக்கோ யிலின் குடமுழக்கைத் தமிழில் நடத்த வேண்டுமென அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து உறுதிப்படுத்தியதற்காக தெய்வத்தமிழ்ப் பேரவையினர் மீதும், தமிழ்த்தேசிய பேரியக்கத்தினர் மீதும், தமிழ் வேத ஆகமப் பாடசாலை நிறுவனருமான சிம்மம் சத்தியபாமா அம்மையார் தலைமையிலான அடியார்கள் மீதும் ஆர்.எஸ்.எஸ், பாஜக மதவெறியர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
பாஜக- ஆர்எஸ்எஸ் வன்முறை
திருக்கோயிலின் கோபுரக் கலசம் வேள்விச்சாலை - கருவறை ஆகிய மூன்று இடங்களிலும் சமற்கிருதத்திற்கு இணையாகத் தமிழில் வழிபாடு நடத்த வேண்டுமென்ற தெய்வத் தமிழ்ப் பேரவையின் கோரிக்கையை கோயில் நிர்வாகம் ஏற்றுக்கொண்டது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாத கோயிலின் அர்ச்சகர்கள் ஆர்.எஸ்.எஸ். பா.ச.க. மதவெறியர்களுக்கு இதுகுறித்துத் தகவல் அளித்து அவர்களின் தூண்டுதலின் பேரிலேயே இக்கொடுந்தாக்குதல் நடைபெற்றுள்ளது. கற்கள், தடிகள் மற்றும் நாற்காலிகள் கொண்டு மதவெறியர்கள் நிகழ்த்திய இக்கொடுந்தாக்குதலில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தைச் சேர்ந்த சகோதரர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் படுகாயமடைந்துள்ளதுடன்,
அம்மா சத்தியாபாமா அவர்களையும் தாக்க முயன்று அவரது மகிழுந்தையும் சேதப்படுத்தியுள்ளது மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. அதுமட்டுமின்றி மதவெறியர்கள் அலுவலகத்திற்குள் புகுந்து அறநிலையத்துறை அதிகாரிகள் பூவரசன் உள்ளிட்டோரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். மயிரிழையில் அனைவரும் உயிர் தப்பியுள்ளனர். இக்கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளான தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொறுப்பாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட உறவுகள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
வாக்குகளைப் பறிப்பதற்கான வெற்று நாடகம்
பிரதமர் மோடி தமிழின் தொன்மை குறித்து உலக நாடுகளில் பேசி விட்டதாக பெருமைகொள்ளும் அண்ணாமலை தமிழக பாஜக தலைவர்கள், தமிழர் நிலத்தில் தமிழர் கட்டிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தக்கூடாது என்று தடுத்து கொலைவெறித்தாக்குதலில் ஈடுபட்டுள்ளதற்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்? இதுதான் உலகின் தொன்மையான மொழியான தமிழுக்கு பாஜக செய்யும் மரியாதையா? கொடுக்கும் மதிப்பா? இதிலிருந்தே தமிழ்மொழி மீது பற்று கொண்டவர்கள் போல் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பேசுவது தேர்தலில் தமிழர் வாக்குகளைப் பறிப்பதற்கான வெற்று நாடகம் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தமிழ்நாட்டில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் உயர்நீதிமன்ற உத்தரவைக்கூட திமுகவால் முறையாக நடைமுறைப்படுத்த முடியாதா? ஒவ்வொரு முறையும் தமிழர்கள் கோரிக்கை விடுத்து, பேச்சுவார்த்தை நடத்தி, போராடினால் மட்டும்தான் தமிழில் குடமுழுக்கை நடத்துமா திமுக அரசு? இதுதான் பாஜகவின் ஆரிய வர்ணாசிரம அடக்குமுறைகளை திமுகவின் திராவிட மாடல் அரசு எதிர்க்கும் லட்சணமா? பாஜகவின் சனாதனத்தைக் கடுமையாக எதிர்ப்பதாக கூறும் திமுக அரசு தெய்வத்தமிழ் பேரவையினர் மீதான தாக்குதலைத் தடுக்கத்தவறி கைகட்டி வேடிக்கை பார்த்தது ஏன்?
பாஜகவினரை கைது செய்திடுக
இதிலிருந்து தமிழர்களை ஏமாற்றி அதிகாரத்தை அபகரிக்கவே சண்டையிடுவது போல் திராவிட திமுகவும் - ஆரிய பாஜகவும் நாடகமிடுகின்றன என்பதும், உண்மையில் இரண்டுமே ஈருடல் ஒருயிர் போல் இணைந்து செயல்படும் கூட்டுச் சதிகாரர்கள் என்பதும் தமிழர்கள் மீதான பாஜவினரின் இக்கொலைவெறித் தாக்குதலுக்கு திமுக அரசு துணைநின்றதன் மூலம் மீண்டுமொருமுறை உறுதியாகியுள்ளதாக சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதையும் படியுங்கள்