திமுக எம்.பி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கைது செய்திடுக..! ஸ்டாலின் அரசை இறங்கி அடிக்கும் ஓபிஎஸ்

By Ajmal Khan  |  First Published Jun 28, 2023, 9:47 AM IST

தி.மு.க. மக்களவை உறுப்பினர்  எஸ். ஞானதிரவியம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கைது செய்ய வலியறுத்தியுள்ள ஓ.பன்னீர் செல்வம், ஞானதிரவியம் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து, சட்டத்தின்முன் நிறுத்தி, உரிய தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். 


திருநெல்வேலி சி.எஸ்.ஐ. திருச்சபை மண்டல அலுவலகத்தில் பாதிரியாரை கொடூரமாகத் தாக்கியவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  "ரவுடிகளின் ராஜ்ஜியம் தமிழ்நாடு" என்ற கருத்திற்கு மாற்றுக் கருத்து இல்லை என்று சொல்லும் அளவுக்கு கடந்த இரண்டு ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் வன்முறை வெறியாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உச்சகட்டமாக நேற்று முன்தினம் கிறிஸ்தவ மத பேராயரையே தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினரின் தூண்டுதல்பேரில் அவரது ஆதரவாளர்கள் அடித்துள்ள செய்தி பேரதிர்ச்சியை அளித்துள்ளது. திருநெல்வேலி சி.எஸ்.ஐ. திருச்சபை மண்டல நிர்வாகத்தின்கீழ் பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. 

Tap to resize

Latest Videos

இந்தத் திருச்சபையின்பிஷப்பாக திரு. பர்னபாஸ் அவர்கள் இருக்கிறார். திருநெல்வேலி சி.எஸ்.ஐ. திருச்சபையின் கல்வி நிலவரக் குழு செயலாளர் மற்றும் திருச்சபை கட்டுப்பாட்டின்கீழ் வரும் பாளையங்கோட்டை செயின்ட் ஜோசப் பள்ளியின் தாளாளர் பதவிகளை தி.மு.க.வைச் சேர்ந்த திருநெல்வேலி மக்களவைத் தொகுதி தி.மு.க. உறுப்பினர் திரு. எஸ். ஞானதிரவியம் அவர்கள் வகித்து வந்தார். இந்த நிலையில், அரசியலில் தனக்குள்ள செல்வாக்கினை துஷ்பிரயோகம் செய்து,  பேராயருக்கு தினமும் பல தொந்தரவுகளை கொடுப்பதை திரு. ஞானதிரனியம் அவர்கள் வாடிக்கையாக வைத்திருந்ததையடுத்து, அவரை செயின்ட் ஜோசப் கல்லூரியின் தாளாளர் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு, அந்தப் பொறுப்பிற்கு வேறு ஒருவரை நியமித்தார் பேராயர் அவர்கள். இதனால்,

 ஆத்திரமடைந்த தி.மு.க மக்களவை உறுப்பினர் திரு. ஞானதிரவியத்தின் ஆதரவாளர்கள் சென்ற வெள்ளிக்கிழமை கல்லுரிக்கு சென்று ரகளையில் ஈடுபட்டதாகவும், இதனைத் தீர்த்து வைக்கும் வகையில், பிஷப் காட்ப்ரே நோபிள் அவர்கள் சி.எஸ்.ஐ. திருமண்டலம் சார்பில் அனுப்பப்பட்டதாகவும், இந்தத் தருணத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட தாளாளர் பொறுப்பேற்பதற்கு எதிராக திரு. ஞானதிரவியத்தின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தியதாகவும், சி.எஸ்.ஐ. திருமண்டல அலுவலகத்தை பூட்டி சாவியை எடுத்துச் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் திருநெல்வேலி சி.எஸ்.ஐ. திருச்சபை மண்டல பிஷப் அவர்களின் ஆதரவாளர்களை தி.மு.க. மக்களவை உறுப்பினர் திரு. ஞானதிரவியத்தின் ஆதரவாளர்கள் கண்மூடித்தனமாக தாக்குவதும், இந்தத் தாக்குதலில் பிஷப் காட்பிரே நோபிள் அவர்கள் மோசமாக தாக்கப்பட்டதும்,

 உதைக்கப்பட்டதும் வீடியோ காட்சிகளாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கின்றன. ஒரு நாடாளுமன்ற உறுப்பினரே தனது ஆதரவாளர்கள்மூலம் ஒரு பாதிரியாரையும், அவரது ஆதரவாளர்களையும் தாக்குவது என்பது கடும் கண்டனத்திற்குரியது. தி.மு.க. எம்.பி. உட்பட 33 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தாலும், உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் நிலவுகிறது. இதற்குக் காரணம், இதற்கு முன்பு கவுன்சிலரையும், தி.மு.க.வினரையும் தாக்கிய அமைச்சர்கள் மீதோ, ஒப்பந்ததாரரை மிரட்டிய சட்டமன்ற உறுப்பினர் மீதோ, கல் வீசிய முன்னாள் அமைச்சர் மீதோ சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதுதான். 

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, பிஷப் காட்ப்ரே நோபுள் அவர்களும், திருநெல்வேலி சி.எஸ்.ஐ. பிஷப் அவர்களுடைய ஆதாரவாளர்களும், அலுவலகமும், பள்ளியும் தாக்கப்பட்டதற்கு மூல காரணமாக விளங்கிய தி.மு.க. மக்களவை உறுப்பினர் திரு. எஸ். ஞானதிரவியம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கைது செய்யவும்; அவர்கள்மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து, சட்டத்தின்முன் நிறுத்தி, விரைவில் அவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். 
 

click me!