வரி என்ற பெயரில் ஏழை மக்களின் குருதியை குடிப்பதற்குப் பெயர்தான் திராவிடல் மாடல் அரசின் சாதனையா?- சீறும் சீமான்

By Ajmal Khan  |  First Published Jul 10, 2023, 7:48 AM IST

அரசுகள் மக்களிடமிருந்து பெறுகின்ற வரியானது மலருக்கு சுமை தராமல் தேனினை உறிஞ்சும் வண்டின் செயல்பாட்டினைபோல மென்மையானதாக இருக்க வேண்டுமே தவிர, மலரினை காலில் போட்டு மிதித்து கசிக்கிப் பிழிந்து சாறு எடுப்பதுபோல இரக்கமற்ற வன்முறையாக இருந்திடக்கூடாது என சீமான் தெரிவித்துள்ளார்.
 


பத்திரப்பதிவு கட்டணங்கள் உயர்வு

பத்திரப்பதிவு கட்டணங்களை தமிழக அரசு உயர்த்தி இருப்பதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளால். இது தொடர்பாக அவல் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி முக அரசு பத்திரப்பதிவு கட்டணங்களை பன்மடங்கு உயர்த்தியுள்ளது வன்மையான கண்டத்துக்குரியது. ஏற்கனவே அதிகரித்துள்ள அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,

Tap to resize

Latest Videos

தற்போது பத்திரப்பதிவுக்கான கட்டணத்தையும் உயர்த்தி மக்களை வாட்டி வதைப்பதென்பது கொடுங்கோன்மையாகும். திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த இரண்டு ஆண்டுகளில் மின் கட்டணம், போக்குவரத்து கட்டணம், சொத்து வரி ஆகியவற்றை உயர்த்தி தமிழ்நாட்டு மக்களை வாழ முடியாத அளவிற்கு பொருளாதார நெருக்கடியில் தள்ளியுள்ளது. 

பாமர மக்களால் எப்படி செலுத்த முடியும்?

அக்கொடுமைகளின் நீட்சியாக தற்போது பத்திரப்பதிவு கட்டணத்தையும் பன்மடங்கு உயர்த்தியுள்ளது மக்களை மேலும் வறுமையின் பிடியில் தள்ளவே வழிவகுக்கும்.பத்திரப்பதிவுக்கான ரசீது கட்டணம் 20 ரூபாயாக இருந்ததை 10 மடங்கு உயர்த்தி 200 ரூபாயாகவும், குடும்பத்திற்குள் நடைபெறும் சொத்துப் பகிர்வு, பாகப்பிரிவினைக்கான ஆவணப்பதிவுக்கான கட்டணத்தை ரூ.4000லிருந்து 10000 ரூபாயாகவும் திமுக அரசு உயர்த்தியுள்ளதை ஏழை எளிய பாமர மக்களால் எப்படி செலுத்த முடியும்? முத்திரை தீர்வை கட்டணம் 25000 ரூபாயை 40000 ரூபாயாக ஒரே அடியாக உயர்த்தியுள்ளதும் ஏற்கவே முடியாத பெருங்கொடுமையாகும். 

ஏழை மக்களின் குருதியை குடிப்பதற்குப் பெயர்தான் திராவிடல் மாடலா?

ஆளும் அரசுகள் மக்களிடமிருந்து பெறுகின்ற வரியானது மலருக்கு சுமை தராமல் தேனினை உறிஞ்சும் வண்டின் செயல்பாட்டினைபோல மென்மையானதாக இருக்க வேண்டுமே தவிர, மலரினை காலில் போட்டு மிதித்து கசிக்கிப் பிழிந்து சாறு எடுப்பதுபோல இரக்கமற்ற வன்முறையாக இருந்திடக்கூடாது. வரி என்ற பெயரில் ஏழை மக்களின் குருதியை குடிப்பதற்குப் பெயர்தான் திமுகவின் திராவிடல் மாடல் அரசின் சாதனையா? ஆகவே, திமுக அரசு ஏழை மக்களால் தாங்க முடியாத அளவிற்கு மிகக்கடுமையாக உயர்த்தியுள்ள பத்திரப்பதிவு கட்டணத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துவதாக சீமான் கூறியுள்ளார். 

இதையும் படியுங்கள்

பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநர் மூலம் நெருக்கடி.!ஆர்எஸ்எஸ் ஊதுகுழலாக செயல்படும் ஆர்.என்.ரவி.!-காங்கிரஸ்

click me!