200 ஆண்டுகளில் இல்லாத கனமழை; அரசின் செயல்பாடு கவலையளிக்கிறது - நாம் தமிழர் தம்பிகளுக்கு சீமான் அழைப்பு

By Velmurugan sFirst Published Dec 18, 2023, 2:55 PM IST
Highlights

தென்மாவட்டங்களில் 200 ஆண்டுகளில் இல்லாத கனமழை பெய்துவரும் நிலையில் அரசு எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருப்பது கவலை அளிப்பதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “கடந்த 200 ஆண்டுகளில் இல்லாத தொடர் கனமழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நிலையில் இதுவரை அரசின் சார்பில் முழு வீச்சில் மீட்புப்பணிகளும், துயர் துடைப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாததால் மக்கள் பரிதவிக்கும் அவலநிலை பெருங்கவலையைத் தருகிறது. திமுக அரசின் அலட்சியத்தால் பெருமழை வெள்ளத்தில் சிக்கி தலைநகர் சென்னை கடும் பாதிப்பினைச் சந்தித்த நிலையில், வரலாறு காணாத பாதிப்பை சந்தித்துள்ள தென்மாவட்டங்களிலும் அதே போன்றதொரு மெத்தனப்போக்குடன் அரசு செயல்படுவது வன்மையான கண்டனத்துக்குரியது.

தென்மாவட்டங்களில் இடைவிடாது பெய்துவரும் தொடர் கனமழையால், திருச்செந்தூர், ஆழ்வார் திருநகரி, திசையன்விளை, உடன்குடி, கூடங்குளம், திருவைகுண்டம், காயல்பட்டினம், வள்ளியூர், சமாதானபுரம், மூலக்கரைப்பட்டி, களக்காடு, கோவில்பட்டி, மையிலாடி, அஞ்சுகிராமம் சாலை, இறச்சகுளம், திட்டுவிளை, குலசேகரம், நாகர்கோவில், குழித்துறை, ஆரல்வாய்மொழி மற்றும் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களின் பெரும்பாலான முதன்மைச்சாலைகள் யாவும் வெள்ளத்தால் முற்றிலுமாக சேதமாகியுள்ளன. கனமழை மேலும் தொடரும் என்ற வானிலை மையத்தின் அறிவிப்பால் மக்கள் பெரும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.

சிதம்பரம் நடராஜர் ஆலய ஆருத்ரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

தாமிரபரணி, மணிமுத்தாறு, பேச்சுப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, மாம்பழத்துறையாறு, முக்கடல் உள்ளிட்ட அனைத்து முக்கிய அணைகளும் நிரம்பி வழிகின்றன. நான்கு மாவட்டங்களிலும் பல்லாயிரக்கான வீடுகள் இடிந்துள்ளன. பல நூற்றுக்கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்து மின்சாரம் முற்றிலுமாகத் தடைப்பட்டுள்ளதால் தென் மாவட்டங்கள் முழுவதும் இருளில் மூழ்கியுள்ளன. ஆறுகள் உடைப்பெடுத்து, தரைப்பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் பல கிராமங்கள் தனித்தீவுகளாகத் துண்டிக்கப்பட்டுள்ளன. சாலைகளில் ஆயிரக்கணக்கான மரங்கள் விழுந்து கிடப்பதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல முடியாத நிலை இருக்கிறது. 

தென் மாவட்டங்களின் அனைத்துக் குளங்களும், கால்வாய்களும் நிரம்பி பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டதால் பல்லாயிரம் ஏக்கர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி, நெல் உள்ளிட்ட விளைபொருட்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்குப் போதிய உணவு, குடிநீர், மருந்துகள், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரப்படவில்லை. மழை வெள்ளத்தால் மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் கொள்ளாத முடியாத நிலையில், அரசும் எவ்விதத் துயர் துடைப்பு உதவிகளும் செய்யாதிருப்பதால் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ள மக்கள் பசியால் வாடும் கொடுஞ்சூழல் நிலவுகிறது. 

ஒரு வருடம் முழுவதும் பெய்யவேண்டிய மழை ஒரே நாளில் கொட்டி தீர்த்துள்ளது - தலைமை செயலாளர் பரபரப்பு தகவல்

ஆகவே, மெத்தனப்போக்குடன் நடைபெறும் வெள்ளப்பாதிப்பு மீட்புப்பணிகளை விரைந்து செயல்பட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு போர்க்கால அடிப்படையில் மக்களை மீட்க வேண்டுமெனவும், இந்திய ஒன்றிய அரசு தேசிய பேரிடர் மீட்பு படையைக் நான்கு மாவட்டங்களுக்கும் அனுப்பி, வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கவும், சாலைகளில் விழுந்துள்ள மரங்களை அகற்றிப் போக்குவரத்தைச் சரிசெய்யவும், மின்கம்பங்களைப் பழுதுபார்த்து தடைப்பட்டுள்ள மின் விநியோகத்தை விரைந்து வழங்கவும், பெரும் பாதிப்புக்குள்ளாகிய மக்கள் அவசரத்தேவைக்கு தொடர்புகொள்ளும் வகையில் தகவல் தொலைதொடர்பை உடனடியாக சரிசெய்யவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, குடிநீர், உடை, கழிப்பிட வசதி செய்து தந்து, தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கப் போதிய மருத்துவ முன்னேற்பாடுகளையும் செய்துதர வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். 

ஒவ்வொரு இயற்கை பேரிடரின் போதும் உடனடியாகக் களத்தில் இறங்கி துயர் துடைப்பு உதவிகளை வழங்கிய தமிழ்நாடு முழுவதுமுள்ள என் உயிர்க்கினிய நாம் தமிழர் உறவுகள், தற்போது கடும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நமது தென்மாவட்ட மக்களின் துயர் துடைக்கவும் உனடியாக களத்தில் இறங்கி, பாதுகாப்புடன் தம்மால் இயன்ற உதவிகளைச் செய்யவேண்டும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

குறிப்பாக திருநெல்வேலி, தூத்துகுடி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் அதன் அருகமைந்த மாவட்டங்களைச் சார்ந்த எனதன்பு தம்பி, தங்கைகள் தங்களால் இயன்றளவு உணவுப்பொருட்கள், உடைகள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை உடனடியாகச் சேகரித்துக்கொண்டு, முறைப்படுத்தி பாதிக்கப்பட்ட பகுதி மக்களிடம் நேரடியாக வழங்கி, இப்பெருந்துயரிலிருந்து மீண்டுவர அவர்களுக்கு ஆறுதல் கூறுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

click me!