
தமிழகத்தில் பாஜகதான் ஆட்சி நடத்தி கொண்டு இருக்கிறது. அதிமுக, மத்திய அரசின் கைப்பாவையாக இருக்கிறது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
நெடுவாசல் மக்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக் கோரி கடந்த 3 மாதங்களாக மக்கள் போராடி வருகின்றனர். ஆனால் இன்று வரை அவர்களை மத்திய,மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை. இந்த உழைக்கும் மக்கள் எத்தனை நாள் தான் போராடுவார்கள்…?
நாள்தோறும் வேலைக்கு சென்றால்தான் குடும்பத்தை நடத்த முடியும், இந்த இக்கட்டான நிலையில் அவர்கள் வேலைக்கு போவார்களா? அல்லது போராட்டம் நடத்துவார்களா?
தொடர்ந்து நீர், நிலம்,.காற்று ஆகிய மூன்றும் மாசுப்பட்டு வருகிறது. இதனால்தான் இந்த மக்கள் போராடுகிறார்கள், அந்த போராட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கொச்சைப்படுத்த வேண்டாம்.
மக்கள் விரும்பினால்தான் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படும் என மத்திய,மாநில அரசுகள் சொல்லி வருகின்றன. இத்திட்டங்கள் வேண்டாம் என்பதற்காகவே தான் மக்கள் போராடி வருகிறார்கள். அப்படியிருக்கும்போது மக்கள் விருப்பத்தை மீறி இத்திட்டங்களை மத்திய ,மாநில அரசுகள் செயல்படுத்த துடிப்பது ஏன்.
தமிழகத்தில் அதிமுக பெயரளவுக்குத்தான் ஆட்சியில் இருக்கிறதே தவிர, பாஜக தான் இங்கு ஆளும் கட்சியாக உள்ளது. தனது எஜமானர்களான பாஜவினரின் கட்டளைப்படி தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடந்து கொள்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.