
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என இரு அணிகளாக செயல்பட்டு வருகிறது. இந்த இரு அணிகளும் மீண்டும் ஒன்று சேர்வதானால், சசிகலா மற்றும் டிடிவி.தினகரனை கட்சி, ஆட்சியில் இருந்து நீக்க வேண்டும் என ஓபிஎஸ் அணியினர் நிபந்தனை விதித்தனர்.
இதையொட்டி இரு அணிகளும் இணைவதற்கான பேச்சு வார்த்தை நடந்து வந்தது. ஆனால், அதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதைதொடர்ந்து டிடிவி.தினகரன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதற்கிடையில், தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம்கொடுத்ததாக அவரை, டெல்லி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைதுசெய்தனர். கடந்த மாதம் அவர் ஜாமீன் பெற்று வெளியே வந்தார்.
அப்போது, இரு அணிகளும் இணையாமல் உள்ளதால், இனிநானே கட்சியை வழி நடத்துவேன் என தெரிவித்தார். இதையொட்டி எம்எல்ஏக்கள் சிலர், அவரது வீட்டுக்கு சென்று ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதனால், அதிமுகவில் 3வது அணி உருவாகியதாக பேசப்படுகிறது.
இதற்கிடையில், இரு அணிகளும் இணைவதற்காக 7 பேர் கொண்ட பேச்சு வார்த்தை குழு கலைக்கப்பட்டதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இதனால், இனி அணிகள் இணைவதற்கான வாய்ப்பே இல்லை என கூறப்பட்டது.
இந்நிலையில், அமைச்சர் ஜெயகுமார், தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இரு அணிகள் இணைவதற்கான பேச்சு வார்த்தை குழு கலைக்கப்பட்டாலும், எங்களுக்குள் பேச்சு வார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. தனி அணியாக பிரிந்து சென்றவர்கள், எங்களது சகோதரர்கள்தான் தவிர, வேறு யாரும் இல்லை. கட்சியை வழி நடத்த இரு அணிகளும் விரைவில் ஒன்று சேரும்.
தற்போது, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை, ஓபிஎஸ் அணியினர் சந்தித்து பேசியுள்ளனர். இது ஆரோக்கியமான விஷயம். இதில் எந்த தவறும் இல்லை. இங்கிருந்து சென்ற சகோதரர்கள், மீண்டும் வந்து இணைவதில் எந்த பாரபட்சமும் இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.