
'தமிழகத்தில், அரசியல் வெற்றிடத்தை நிரப்ப ரஜினி தேவையில்லை. நானே அந்த இடத்தை நிரப்புவேன்' என்று பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.
மணப்பாறை சந்தையில் மாடுகள் வாங்கிய விவசாயிகள் பொள்ளாச்சி வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மன்னார்குடியைச் சேர்ந்த செண்டலங்கார ஜீயர் ஒருவர் வழி மறித்தார்.
வண்டியில் கொண்டு செல்லப்படும் மாடுகள் உரிய பாதுகாப்பு இன்றி கொண்டு செல்லப்படுவதாகக் கூறி, மாடுகளை பழனி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக இவர்களுக்கிடையே மோதல் போக்கு ஏற்பட்டது. எஸ்.டி.பி.ஐ., கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கும் இடையே கல்வீச்சும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா, இன்று பழனி சென்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் அரசு நிர்வாகம் கெட்டுவிட்டதைப்போல நீதித்துறையும் கெட்டுவிட்டதா? என்று கேள்வி எழுப்பினார்.
பழனி சம்பவத்தில் தடியடி நடத்திய காவல்துறை, ஆம்பூர் கலவரத்தில் ஏன் தடியடி நடத்தவில்லை? என்றும், தமிழகத்தில் நிலவும் அரசியல் வெற்றிடத்தை நிரப்ப ரஜினி எதற்கு நானே அந்த இடத்தை நிரப்புவேன் அவரை விட நான் பிரபலம் என்றும் கூறினார்.