முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா உடல் நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது (76). மதுரை மீனாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் உயிர் இன்று பிரிந்தது.
முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா உடல் நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது (76). மதுரை மீனாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் உயிர் இன்று பிரிந்தது.
பெரியார், அண்ணாவால் ஈர்க்கப்பட்டு முதன்முதலில் திராவிட இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர் சேடப்பட்டி முத்தையா, மாணவர் பருவம் தொட்டே அரசியல்பால் ஈர்கப்பட்டு, திமுக, அதிமுக மீண்டும் திமுக என அரசியிலில் கரைகண்ட அரசியல்வாதி ஆவார்.
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியே அதிமுகவிலிருந்து திமுகவுக்கு திரும்பிய சேடப்பட்டியாரை, சித்தூர் என்றால் சுப்பிரமணியம், திருவாடுதுறை என்றால் ராஜரத்தினம் பிள்ளை, திருவங்காடு என்றால் சுப்பிரமணியபிள்ளை பெயர்கள் தான் நினைவுக்கு வரும் அதுபோல சேடப்பட்டி என்றால் முத்தையாவின் பெயர்தான் நினைவுக்கு வரும் என முத்தையா வை சேடப்பட்டி முத்தையா என புகழ்ந்து பேசியது உண்டு. அந்த அளவுக்கு எம்ஜிஆர்- கருணாநிதியுடன் அரசியல் பயணித்தவர் சேடப்பட்டியார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றான தே கல்லுப்பட்டியின் அக்டோபர் 3 1945 ஆம் ஆண்டு பிறந்தவர் முத்தையா, தனது மாணவப் பருவத்திலேயே பெரியார் அண்ணாவால் ஈர்க்கப்பட்டு திராவிட இயக்கத்தில் ஐக்கியமானார். திமுகவில் இளம் தலைவராக வலம்வந்தார். பின்னர் எம்ஜிஆர் அதிமுக தொடங்கியபோது அவருக்கு உறுதியாக அதிமுகவில் இணைந்த அவர், எம்ஜிஆரின் நம்பிக்கைக்கு உரியவராகவும் திகழ்ந்தார்.
1980-களில் ஓபிஎஸ், மாயத்தேவர் போன்று தென்மாவட்ட அரசியல்வாதிகளில் செல்வாக்கு மிகுந்த தலைவராக வலம்வந்தவர் சேடப்பட்டி முத்தையா. மாயத்தேவர் எம்ஜிஆருக்கு வலதுகரம் என்றால் சேடப்பட்டியார் இடது கரம் என்றே சொல்லலாம். மாயத்தேவருக்கு இணையாக எம்ஜிஆரால் அன்பு பாராட்டப்பட்டவர் சேடப்பட்டியார். மாயத்தேவர் போட்டியிட்ட தொகுதியில் சேடப்பட்டியாரை போட்டியிட இருந்தார் என்பது குறிப்பிடதக்கது, பின்னர் சில காரணங்களுக்காக அது மாற்றப்பட்டது.
பின்னர் ஜெயலலிதா முதல் முறையாக முதலமைச்சராக பதவியேற்ற போது (1991ஆம் ஆண்டு முதல் 1996 வரை) சபாநாயகர் பதவி வகித்தவர் சேடப்பட்டியார், 2000 ஆண்டு வரை அதிமுக என்னும் மாபெரும் இயக்கத்தின் பொருளாளராகவும் இருந்தவர் ஆவர். அப்போது அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவராக இருந்தார் சேடப்பட்டியார். சேடப்பட்டி தொகுதியில் முத்தையா நான்குமுறை தமிழக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதால் அவர் சேடப்பட்டியார் என அவர் பெயர் விளங்கியது.
அதேபோல் அதிமுக சார்பில் பெரியகுளம் நாடாளுமன்ற தொகுதியில் இரண்டு முறை போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதிமுக பாஜக கூட்டணியில் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் அவர் பணியாற்றினார். அப்போது மத்திய அரசை கவிழ்க்க பயன்படுத்திய துருப்புச்சீட்டாக சேடப்பட்டியார் இருந்தார். ஆனால் அரசியலில் எல்லாமே மாறக்கூடியது என்பதற்கு உதாரணமாக, ஏதோ சில காரணங்களால், ஒரு கட்டத்தில் சேடப்பட்டியார் எந்த ஜெயலலிதாவால் அங்கீகரிக்கப்பட்டாரோ அதே ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்டார்.
அதில் ஆப்செட்ஆன அவர், அதிமுகவை வெறுத்து 2010 ஆம் ஆண்டு வாக்கில் தாய் கழகமான திமுகவுக்கு திரும்பினார் சேடப்பட்டியார். அவரின் மூத்த மகன் மணிமாறன் திருமண நிகழ்ச்சிகள் அவரை திமுக தலைவர் மு.கருணாநிதி வரவேற்று உரை நிகழ்த்தினார். அதில் பேசிய கருணாநிதி, காணாமல் போன பிள்ளைகள் திரும்பி வந்தால் தாய் தன் மடியில் அந்த பிள்ளையை அமர்த்தி கொஞ்சுவாள், அதுபோலத்தான் நான் சேடப்பட்டியாருக்கு அன்பு பாராட்டுகிறேன், திரும்பி வந்த மகனை பாராட்டுகிறேன், சேடப்பட்டியாரே வருக என வருகையை பாராட்டு நெகிழ்ச்சியுடன் உரை நிகழ்த்தினார்.
அன்று முதல் இன்றுவரை அவர் திமுகவில் இருந்தாலும், வயது முதிர்வு காரணமாக அரசியலில் இருந்து விலகியே இருந்தார். நிலையில்தான் கடந்த 2021 ஆம் ஆண்டு சேடப்பட்டி முத்தையாவின் இளையமகன் அறிவழகன் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அப்போது பேசிய அறிவழகன், எங்கள் குடும்பத்தை வாழ வைத்தது மறைந்த முதல்வர் எம்ஜிஆர்- ஜெயலலிதா அவர்கள் தான், எங்களுக்கான அடையாளத்தை தந்தவர்கள் அவர்கள்தான், ஆனால் எனது தந்தையும், அண்ணனும் அதையெல்லாம் மறந்து விட்டு திமுகவி எனும் சேற்றில் விழுந்து விட்டனர்.
அதிலிருந்து எழுந்திருக்க முடியாத நிலையில் உள்ளனர். திமுகவின் கொள்கை பிடிக்காததால் நான் அதிமுகவில் இணைகிறேன் என கூறினார். சேடப்பட்டியாரின் மூத்த மகன் திமுகவிலும், இளைமகன் அதிமுகவிலும் பயணிக்கின்றனர். திமுக, அதிமுக மீண்டும் திமுக என 4 முறை எம்எல்ஏ, இரண்டு முறை எம்.பி, ஒருமுறை மத்திய அமைச்சர் ஒருமுறை சபாநாயகர் எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா என அரசியலில் கரைகண்டவர் சேடப்பட்டி யார்.
அரசியலில் ஒதுங்கி இருந்த அவர் அரசியல் கருத்துக்களை அடிக்கடி வெளிப்படுத்தியே வந்தார். இந்நிலையில்தான் உடல்நலக்குறைவால் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் நிலையில் அவர் உயிர் இன்று பிரிந்தது. அவனுக்கு சகுந்தலா என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். சேடப்பட்டி முத்தையாவின் மறைவிற்கு திமுக, அதிமுக மட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.