
தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு படிக்க செல்லும் மாணவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் மாணவர்கள், பாதுகாப்பாக படிக்கும் நிலை இங்கு உள்ளது என்று கூறினார். தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு சென்று படிக்கும் மாணவர்கள் தாக்கப்படுவது வேதனை அளிப்பதாக உள்ளது.
தமிழகத்தில் இருந்து வெளி மாநிலம் சென்று படிக்கும் மாணவர்கள் தாக்கப்படுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனையில் தற்கொலை செய்த சரவணன் இறப்பு பற்றி எந்தவித விளக்கமும் இல்லை என்றும் பிரேத பரிசோதனையில் அது தற்கொலையாக இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதையும் ஸ்டாலின் குறிப்பிட்டுப் பேசினார்.
இதற்கு பதிலளித்த சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், குஜராத்தில் இருக்கும் தமிழக மாணவர் மாரிராஜ், கடந்த 5 ஆம் தேதி தற்கொலைக்கு முயற்சித்தது குறித்து குஜராத் தலைமை செயலாளருக்கு தொடர்பு கொண்டு பேசினேன். இன ரீதியாக சக மாணவர்கள் புண்படுத்தியது தொடர்பாக புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்காததால் மாரிராஜ் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார் என்று கூறினார்.
தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருவதோடு, அவரது பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார். தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு படிக்க செல்லும் மாணவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் அப்போது தெரிவித்தார்.