அதிமுக பொதுக்குழுக்கு பாதுகாப்பு.. போலீசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

By vinoth kumarFirst Published Jun 21, 2022, 1:40 PM IST
Highlights

பெஞ்சமின் தரப்புக்கு நீதிபதி அறிவுறுத்துகையில் எந்த தரப்பு என்றெல்லாம் காவல்துறை பார்க்க கூடாது. அனைத்து தரப்புக்கும் பாதுகாப்பு அளித்து சட்ட ஒழுங்கை நிலை நாட்ட வேண்டும் என நீதிபதி கூறினார். காவல்துறையின் கேள்விகளுக்கு அதிமுக இன்று மதியம் 1 மணிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு பெஞ்சமின் வழக்கு முடித்துவைத்தனர்.

அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து ஆராய்ந்து முடிெவடுக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 அதிமுக பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பெஞ்சமின் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், வரும் 23ம் தேதி வானகரத்தில்  நடைபெறவுள்ள அதிமுக பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள். கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் என 2,500க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளதாகவும், இதனால் இந்த கூட்டத்திற்கு காவல்துறை பாதுகாப்பு அவசியம் எனவும், போக்குவரத்தும் ஒழுங்குபடுத்தப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு அளிக்கக்கோரி ஜூன் 7ஆம் தேதி தமிழக டி.ஜி.பி., ஆவடி மாநகர காவல் ஆணையர், திருவேற்காடு காவல் ஆய்வாளர் ஆகியோரிடம் விண்ணப்பித்ததாகவும், அதன் மீது எந்த முடிவு எடுக்காததால் மீண்டும் ஜூன்15ம் தேதி நினைவூட்டு கடிதம் அனுப்பிய பின்னர், விண்ணப்பத்தின் மீது முடிவெடுக்காமல், காவல்துறை காலம் தாழ்த்துவதாகவும் மனுவில் குறிபிடப்பட்டுள்ளது.  எனவே ஜூன் 23ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்குமாறு தமிழக  டி.ஜி.பி., ஆவடி காவல் ஆணையர் மற்றும் திருவேற்காடு காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கூறப்பட்டுள்ளது.  இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென நீதிபதி என். சதீஷ்குமாரிடம் முறையிடப்பட்டது. 

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா வாதிடுகையில்: பொதுக்குழுவின் கால அட்டவணை வேண்டும். வழக்கை நாளை தள்ளிவைக்க வேண்டும். பொதுக்குழு தொடர்பாக ஏதும் பிரச்சினை என தெரிந்தால் ஒருங்கிணைபாளர் பன்னீர் செல்வம் காவல்துறையை நாடலாம். 26 கேள்விகளை கேட்டிருந்தோம். அதிமுக பதில் வரவில்லை என ஜின்னா கூறினார். 

ஒ.பி.எஸ். தரப்பில் அரவிந்த் பாண்டியன் வாதிடுகையில்: பொதுக்குழுவை கூட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கே அதிகாரம் உள்ளதால், பாதுகாப்பு கோரியும் அவர்கள் மனுத்தாக்கல் செய்ய முடியும். ஆனால், ஒரு அழைப்பாளராக கலந்து கொள்ள இருக்கும் மூன்றாவது நபரால் தனிப்பட்ட முறையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதனால் விசாரணைக்கு உகந்ததல்ல. யாரோ பிரச்சனை செய்வார்கள், கலவரம் நடக்கும் என்றெல்லாம் மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.

இதில், குறுக்கிட்ட நீதிபதி பெஞ்சமின் பொதுக்குழு உறுப்பினர் இல்லையா??? என கேள்வி எழுப்பினார். அப்போது, ஒ.பி.எஸ். தரப்பில் பொதுக்குழு உறுப்பினர்தான் ஆனால் பாதுகாப்பு கோரி வழக்கு தொடர முடியாது. பொதுக்குழு கூட்டுவதில் உள்ள பிரச்சினை குறித்து காவல்துறையை அணுகுவோம். பெஞ்சமின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதிடுகையில்: 2600 பேர் வரை வருவார்கள். அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்படும். அனைத்து வாகனங்களுக்கும் பாஸ் வழங்கப்படுகிறது. எம்.பி., எம்.எல்.ஏ. யாராக இருந்தாலும் உரிமை வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

பெஞ்சமின் தரப்புக்கு நீதிபதி அறிவுறுத்துகையில் எந்த தரப்பு என்றெல்லாம் காவல்துறை பார்க்க கூடாது. அனைத்து தரப்புக்கும் பாதுகாப்பு அளித்து சட்ட ஒழுங்கை நிலை நாட்ட வேண்டும் என நீதிபதி கூறினார். காவல்துறையின் கேள்விகளுக்கு அதிமுக இன்று மதியம் 1 மணிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு பெஞ்சமின் வழக்கு முடித்துவைத்தனர்.

click me!