
காலியாகும் கமலின் கூடாரம்
நடிகர் கமல்ஹாசன் தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வருவதற்காக மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கினார். நாடாளுமன்ற தேர்தல் வரை ஏறுமுகத்தில் இருந்த கமல் கட்சி, சட்டசபை தேர்தலில் சறுக்கியது, கமலை நம்பி வந்த பலரை யோசிக்க வைத்து உள்ளது. மகேந்திரனுக்கு ஆதரவாக, இரண்டாம் கட்ட நிர்வாகிகள் சிலர், கட்சியை விட்டு விலகினர். அவர்களை தொடர்ந்து, முக்கிய நிர்வாகிகளும் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருகின்றனர். அந்தவகையில் மக்கள் நீதி மய்யத்தில் தலைமை நிலைய மாநில செயலாளர் FOODKING E.சரத்பாபு தற்போது கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து இன்றிலிருந்து (25.05.2022) விலகுகிறேன்.இப்படிப்பட்ட ஒரு முடிவினை நான் இன்று எடுப்பதற்கான காரணத்தை மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர் அனைவருக்கும் தெரிவிப்பது எனது முக்கியமான கடமையும் பொறுப்பும் ஆகும் என தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையோடு கட்சியில் இணைந்தேன்
இளம் தொழில் முனைவராகவும் சமூக சேவகராகவும் அறியப்பட்ட நான் இந்தியா முழுவதும் 2000-க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சுமார் 25 லட்சம் மாணவர்களுக்கு ஊக்க உரை நிகழ்த்தியுள்ளேன். பட்டினி இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் HungerFree India என்ற தொண்டு நிறுவனத்தை துவங்கி பல்வேறு மாணவர்களுக்கு உணவு, கல்வி கட்டணம், நோட்டு புத்தகம், சீருடை உள்ளிட்ட அடிப்படை உதவிகள் செய்து கொடுத்துள்ளதாகவும தெரிவித்துள்ளார்.. இந்தநிலையிலை ஜனநாயக ரீதியாக கட்டமைக்கப்பட்ட, ஒரு அரசியல் அமைப்பான மக்கள் நீதி மய்யம் கட்சியின் மீது பெரும் நம்பிக்கை கொண்டும், கமல் ஹாசன் மீதான நம்பிக்கையினாலும், 2021 முதல் மார்ச் மாதம் முதல் கட்சியில் இணைந்து தீவிர பணியாற்றியதாக தெரிவித்துள்ளார். 2021 சட்டமன்ற தேர்தலின் போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு, 21139 வாக்குகள் பெற்று 3வது இடத்தை பிடித்ததாகவும் கூறியுள்ளார்.
கட்சியில் ஆர்வம் காட்டாத கமல்
தேர்தல் முடிவிற்கு பின் ஜூன் மாதம் தலைவர் கமலஹாசன் அவர்கள் மாநில செயலாளர் பொறுப்பு வழங்கியதாகவும், அதன் பிறகு ஊரக உள்ளாட்சி தேர்தலையும், நகர்புற உள்ளாட்சி தேர்தலில் முழு பங்காற்றி எதிர்கொண்டு கணிசமான வேட்பாளர்களையும் வாக்குகளையும் கட்சிக்காக பெற்றுக் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். தலைவர் அவர்களின் ஈடுபாடு இரண்டு உள்ளாட்சி தேர்தல்களிலும் மிகவும் குறைவாக இருப்பதை காண முடிந்தது. அதன் பிறகு தலைவர் அவர்களின் ஈடுபாடு கட்சியில் வெகுமாக குறைந்து, வருவாய் ஈட்டும் மனநிலைக்கு முழுவதுமாக சென்றுவிட்டார். இதனால் தமிழ்நாட்டில் இக்கட்சியினால் எவ்வித மாற்றத்தையும் மக்களுக்காக கொண்டு சேர்க்க முடியாது என்ற நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தொடர மனமில்லாமல் விலகுவதாக தெரிவித்துள்ளார்.