
பஞ்சாபில் TSPL எனும் நிறுவனம் அமைத்து வரும் அனல் மின்நிலையம் அமைப்பதற்கான பணிகள் சீன நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான பணிகளில் ஈடுபடுவதற்காக 263 சீனர்களுக்கு விதிகளை மீறி விசா பெற்றுத் தர, TSPL நிறுவனம் கார்த்தி சிதம்பரத்திற்கும், அவரது ஆடிட்டர் பாஸ்கர ராமன் என்பவருக்கும் லஞ்சம் கொடுத்ததாக சிபிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், கட்டுமானப் பணிகள் தாமதமானதால் சீனப்பணியாளர்களின் விசாவை நீட்டிக்க TSPL நிறுவனம் மீண்டும் பாஸ்கர ராமனை அணுகியதாகவும் சிபிசி கூறியுள்ளது. இது தொடர்பாக பாஸ்கர ராமனிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அவர் கடந்த 18-ம் தேதி கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. உச்சநீதிமன்றம், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதியுடன் வெளிநாடு சென்ற கார்த்தி சிதம்பரம் இன்று நாடு திரும்பவுள்ளார்.
நாடு திரும்பிய 16 மணி நேரத்தில் அவர் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. கார்த்தி சிதம்பரம் மீது, ஏற்கனவே 2017ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி ஊழல் வழக்கை சிபிஐ பதிவு செய்தது. இதையடுத்து அமலாக்க இயக்குனரகம், பணமோசடி வழக்கை பதிவு செய்தது. சிபிஐ பதிவு செய்த எஃப்ஐஆர் அடிப்படையில் பொருளாதார குற்றங்கள் கண்காணிப்பு குழுவும், அவர் மீது பணமோசடி தடுப்பு சட்டம் (PMLA) வழக்கைப்பதிவு செய்தது.
இது தொடர்பாக 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம், ஒரு மாதத்துக்கு பின்னர் மார்ச் மாதம் ஜாமீனில் வெளி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விசா முறைகேடு விவகாரத்தில் காங். எம்.பி., கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. 250 சீனர்களுக்கு முறைகேடாக விசா பெற்று தந்த வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.