14 ஆண்டுகள் கழித்த ஆயுள்சிறைவாசிகளை விடுதலை செய்யுங்க.. மாதையன் மரணத்தால் கொதிக்கும் வன்னி அரசு.

By Ezhilarasan BabuFirst Published May 25, 2022, 1:58 PM IST
Highlights

14 ஆண்டுகள் கழித்த ஆயுள்சிறைவாசிகளை தமிழ்நாடு அரசு உடனே விடுதலை செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப்பொதுச் செயலாளர் வன்னி அரசு வலியுறுத்தியுள்ளார். 

14 ஆண்டுகள் கழித்த ஆயுள்சிறைவாசிகளை தமிழ்நாடு அரசு உடனே விடுதலை செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப்பொதுச் செயலாளர் வன்னி அரசு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:- 

வீரப்பனுடைய சகோதரர் மாதையன் உடல்நலமில்லாமல் மரணித்துள்ளார். 33 ஆண்டுகளாக கோவை சிறையில் ஆயுள்சிறைவாசியாக வாடி வந்தார். இப்போது சேலம் சிறையிலிருந்த போது தான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உடல் நலமில்லாமல் இறந்து போனார். கடந்த 3.10.2017 அன்று மாதையனை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு பரிசீலிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. ஆனாலும் அன்றைய அரசு விடுதலை செய்ய மறுத்துவிட்டது. சிதம்பரநாதன் எனும் வனக்காவலரை சுட்டுக்கொன்றதாகத்தான் இவர் மீது வழக்கு.

இவருடன் சேர்ந்து ஆண்டியப்பன், பெருமாள் ஆகியோரும் ஆயுள்சிறைவாசிகளாக வாடி வருகின்றனர். 87வயதை கடந்து உடல் நலமில்லாமல் விடுதலைக்காகவும் தனது மனைவி மாரியம்மாளை காணவும் ஏங்கிக்கொண்டிருந்தவர் இப்போது உயிரோடு இல்லை. 14ஆண்டுகள் ஆயுள்சிறைவாசிகளாக இருப்போரை விடுதலை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தின் பல தீர்ப்புகள் உள்ளன. ஆனாலும் விடுதலை கனவாகவே போனது. ஆகவே, மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்கள் கருணை கூர்ந்து 14 ஆண்டுகளை கழித்த ஆயுள்சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்.

#பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாநில அரசுக்கான அதிகாரத்தை வரையறுத்துள்ளனர். ஆகவே, மீதமுள்ள ஆயுள் சிறைவாசிகளை மனிதநேயத்துடன் விடுதலை செய்ய மாண்புமிகு முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
 

click me!