
இன்றைய காலை நேர பரபரப்பு செய்தி... மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போய்ஸ் தோட்ட வேதா இல்லத்துக்குள், ஜெயலலிதாவுக்கு திதி கொடுப்பதாகக் கூறி உள்ளே செல்ல முயன்ற டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களுக்கு அனுமதி மறுத்த காவல்துறையினர் அவர்களை அங்கிருந்து திருப்பி அனுப்பினர். இந்தக் காரணத்தைச் சொல்லிக் குவிந்த தினகரன் ஆதரவாளர்கள் திடீரென 200 க்கும் மேற்பட்டோர் அங்கே குவித்தால் சிறிது நேரம் அங்கு பதற்றம் நிலவியது.
ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் அவரது மறைவுக்குப் பிறகு அரசுடமை ஆக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பு வெளிவரும் முன்னே, இவ்வாறாக அறிவிக்கப்படக் கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவியபோதே, போயஸ் இல்லத்தில் இருந்து சசிகலா குடும்பத்தினரால் முக்கியமான பொருள்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டன.
இந்நிலையில் சசிகலா குடும்பத்தினரின் வீடுகளில் சோதனை முடித்த சில நாட்களில், கடந்த வாரம் போயஸ் தோட்ட இல்லத்துக்குள்ளும் அதிரடியாகப் புகுந்த வருமானவரித் துறையினர் சசிகலாவின் 5 அறைகள், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனின் அறை என சோதனை மேற்கொண்டனர். ஆனால், ஜெயலலிதாவின் தனிப்பட்ட அறையில் சோதனை மேற்கொள்ள ஜெயா டிவி.,யின் நிர்வாகி விவேக் ஜெயராமன் தடுத்ததாகவும், அதைத் தாங்கள் அனுமதிக்கவில்லை என்றும் கூறியிருந்தார். இது அப்போதே பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.
ஜெயலலிதாவின் வீட்டில் சோதனை மேற்கொள்ள இத்தகைய எதிர்ப்பு ஏன் என்பது பலரது கேள்வி. அந்தக் கேள்விக்கான விடை விரைவில் கிடைத்து விடும்.
ஏற்கெனவே திமுக., ஆட்சியில் 1996ல் இதே ஜெயலலிதா வீட்டில் சோதனை மேற்கொள்ளப் பட்டது. அந்த சோதனையைச் செய்த திமுகவுடன் கைகோர்த்துக் கொண்டு தினகரன் உள்ளிட்ட சசிகலா தரப்பினர் இப்போது அரசியல் செய்து வருகின்றனர். அதைப் பார்த்தால், ஜெயலலிதா வீட்டில் சோதனையா என்று ஏதோ செண்டிமெண்ட்டாக தகவல் பரப்பி, திசை திருப்பும் பணியைத்தான் இவர்கள் செய்து வருகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.
ஜெயலலிதா வீட்டில் நடந்த இந்த சோதனையின் போது, பென் டிரைவ், லேப்டாப், ஹார்டு-டிஸ்க் என பல முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து வேதா இல்லத்தில் உள்ள 6 அறைகள் சீல் வைக்கப்பட்டு அங்கே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று திடீரென போயஸ் கார்டன் பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டது. முதலில் தினகரன் ஆதரவாளர்கள் போயஸ் கார்டனை முற்றுகையிடப் போவதாக தகவல் வந்தது.
இதையடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ வெற்றிவேல், முன்னாள் அமைச்சர் செந்தமிழன், கலைராஜன் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்டோர் போயஸ் கார்டனை முற்றுகையிட்டு உள்ளே நுழைய முயன்றனர்.
ஆனால், முற்றுகை இடப் போவதான விஷயம் மட்டும் இப்போது மாறிப் போனது. மறைந்த ஜெயலலிதாவுக்கு மாதாமாதம் செய்யக்கூடிய சடங்குகளைச் செய்ய தங்களை அனுமதிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் வருமான வரி சோதனை நடைபெற்று அறைகள் சீல் வைக்கப்பட்டுள்ளதால் யாரையும் உள்ளே விடமுடியாது என போலீசார் தெரிவித்தனர்.
திதி நடத்தக் கூடிய புரோகிதர்களை மட்டுமாவது உள்ளே அனுமதிக்க வேண்டும் என அவர்கள் கோரினர். ஆனால், அதற்கும் போலீஸார் அனுமதி மறுத்தனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வெற்றிவேல், ஒவ்வொரு மாதமும் நடைபெறும் திதியை நடத்தத்தான் நாங்கள் அனுமதி கேட்டோம். ஆனால் அதற்குக் கூட இந்த மக்கள் விரோத அரசு அனுமதி அளிக்க மறுத்து விட்டது எனக் குறிப்பிட்டார். புரோகிதர்களைக் கூட அவர்கள் விட மறுத்ததாகக் கூறிய வெற்றிவேல், இவர்களை அம்மாவின் ஆன்மா மன்னிக்காது என தெரிவித்தார்.
கிட்டத்தட்ட, சென்ற மாதம் வரை போயஸ் கார்டனில் சசிகலா குடும்பத்தினர் எளிதாக சென்று வந்து கொண்டிருந்தனர். கட்டுப்பாடு அவர்கள் கையில் இருந்தது. என்னதான் அரசு நினைவில்லம் ஆக்கப்படும் என்று அறிவித்திருந்தாலும், முழு கட்டுப்பாட்டையும் அரசு எடுத்துக் கொள்ளவில்லை. அதே போல், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தீபக் என உறவினர்களும் சென்றதாகத் தெரியவில்லை. இத்தனை நாட்களும் புரோஹிதர்களை வைத்து அந்த இல்லத்தில் மாச திதி எதுவும் செய்ததாகத் தெரியவில்லை. இந்நிலையில் திடீரென்று திதி கொடுக்க அவர்கள் சென்றது ஏன் என்ற கேள்வியை எழுப்புகின்றனர் பலர்.
பொதுவாக, திவசம் என்பது, இறந்தவர் குடும்பத்தில் உள்ள வாரிசுகள் அல்லது இரத்த பந்தம் கொண்டவர்கள் செய்வார்கள். அம்மா குடும்பத்தில் பலர் இருக்கும் போது திதி செய்ய இவர்கள் யார்? வெற்றிவேல், கலைராஜன் உள்ளிட்டோர் என்ன முறையில் திதி கொடுக்கச் சென்றார்கள்? அதற்கும் இதற்கும் என்ன தொடர்பு?
எனவே, அம்மா அறையில் ஏதோ உள்ளது. அதை எடுக்கத்தான், இப்படி ஒரு முயற்சியை தினகரன் ஆதரவாளர்கள் மேற்கொண்டுள்ளனர். அதனை இன்று போலீசார் முறியடித்துள்ளனர். எனவே, இந்த அறை விவகாரத்தில் ஐ.டி., துறையும் போலீஸாரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று விவாதங்கள் பல இப்போது எழுந்திருக்கின்றன.