
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி என்று மூன்று ஆளுமை மிகுந்த வலுவான பெண்களால் வளர்க்கப்பட்ட நானும் ஒரு ஸ்டிராங் மேன்தான் என விவேக் ஜெயராமன் தெரிவித்துள்ளார். குழந்தையாக இருந்தபோது நான் செய்யும் குறுப்புகளை ஜெயலலிதா ரசித்துச் சிரிப்பார் என்றும், அழுதால் மட்டும் அவருக்கு பிடிக்காது என்றும் அவர் உருக்கமாக தெரிவித்தார்.
2015 ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா,இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட போதுதான் விவேக் ஜெயராமன் வெளிச்சத்துக்கு வந்தார். அவர்கள் சிறையில் இருந்தபோது அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தது விவேக் ஜெயராமன்தான்.
அப்போது பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் விவேக் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவரது மேலதிகாரி தண்ணீர் எடுத்துவரச் சொன்னால் உடனே ஓடிப்போய் தண்ணீர் கொண்டுவந்து தருவாராம். ஆனால் அவர் யாரென்று அந்த அதிகாரிக்கு தெரியாதாம்.
இந்த நிலையில்தான் சிறையில் இருக்கும் ஜெயலலிதா, சசிகலா ஆகியோருக்கு உதவியாக இருப்பதற்கு விவேக் தனது மேலதிகாரியிடம் விடுமுறை கேட்டிருக்கிறார். எதற்கு லீவு என அதிகாரி கேட்டபோதுதான் ஜெயலலிதா குறித்து அந்த அதிகாரியிடம் விவேக் தெரிவித்திருக்கிறார். வாயடைத்துப் போன அந்த அதிகாரி எழுந்து சல்யூட் அடித்து விவேக்கை அனுப்பி வைத்தாராம்.
அதன் பின்னர்தான் விவேக்கிறகு ஒரு அசுர வளர்ச்சி… ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தை பார்த்துக்கொள்ளும் பொறுப்பை ஜெயலலிதா விவேக்கிற்கு வழங்கினார். ஜெயலலிதா மறைந்த பிறகு ஜெயா டி.வி. பொறுப்புகளையும் விவேக் ஏற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் தான் விவேக்கை குறிவைத்து ஒரு மாபெரும் ரெய்டை வருமானவரித்துறையினர் நடத்தி முடித்திருக்கின்றனர். இது தொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு விவேக் பேட்டி அளித்துள்ளார்.
இந்த ரெய்டுகளுக்கு பின்னால் அரசியல் உள்ளதா என்ற கேள்விக்கு, தான் அவ்வாறு எண்ணவில்லை என விவேக் பதிலளித்துள்ளார்.
வருமான வரித்துறை ரெய்டு என்பது தொழில் ரீதியிலானது என்றும் தங்கள் பணியை அவர்கள் செய்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு எப்படிச் செல்கிறது என்பதைப் பொறுத்து தான் இதன் பின் அரசியல் உள்ளதா இல்லையா என்று கூறமுடியும் எனவும் விவேக் விளக்கமளித்துள்ளார்.
ஜாஸ் சினிமாஸ் மற்றும் ஜெயா டிவியை நிர்வகிக்கும் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டுள்ளது… ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின் அனைத்துமே மாறிவிட்டது…. முன்பு மகிழ்ச்சியாக இருந்தேன். இப்போது இல்லை. ஏனென்றால் . யார் விசுவாசமானவர்கள் என்பதை அடையாளம் காண முடியவில்லை என விவேக் மனம் திறந்து கூறியுள்ளார்.
இதே நேரத்தில் எனக்கு அரசியலில் புதிய பொறுப்புவழங்கப்பட்டால், அந்தப் பணியை நான் சிறப்பாக செய்வேன் என்றும், அது எனது கடமை என்றும் விவேக் தெரிவித்துள்ளார்.
தனது தாயார் இளவரசி ஒரு அப்பாவி குடும்பத்தலைவி என்றும் அவர் எனது கண்களுக்கு அவர் தாயாக மட்டுமே தெரிந்தார் என குறிப்பிட்டுள்ள விவேக், ஜெயலலிதா எனக்குத் தந்தையாகவே தோன்றினார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நான் செய்யும் அனைத்து சேட்டைகளையும் சகித்துக்கொண்டு ஜெயலலிதா எனக்கு பாதுகாப்பாக இருந்தார் என்றும் ஒரு சில நேரங்களில் சசிகலா என்னை அதட்டினாலும், ஜெயலலிதா அதட்ட வேண்டாம் என்று சசிகலாவிடம் கூறுவார் என்றும் விவேக் ஜெயலலிதா பற்றி குறிப்பிட்டுள்ளார். ஆனால் நான் அழுதால் மட்டும் ஜெயலலிதாவுக்கு புடிக்காது என்று விவேக் கூறியுள்ளார்.
எனினும், எனது அழுகை மட்டும் அவருக்கு பிடிக்காத ஒன்று. என் மீது மிகவும் பாசமாக இருப்பார். சசிகலாவை பொறுத்தவரை எஜமானராக தெரிந்தார்.
ஜெயலலிதா ஒழுக்க நெறியாளர்… எனக்கு ஒரு வழிகாட்டியாக இருந்தவர்…அதிக பாசம் காட்டியவர்… தவறு செய்தால் கண்டிப்பவர்… என்று தனது குழந்தைப் பருவத்தை விவேக் அந்த பேட்டியில் நினைவு கூர்ந்துள்ளார்.
அப்பா விபத்தில் இறந்த கையோடு எனது தாயுடன் போயஸ் இல்லத்துக்கு வந்த என்னை ஜெயலலிதா தான் உள்ளே அழைத்துச் சென்றார். எனது தாயார் இளவரசி, சின்ன அத்தை சசிகலா, பெரிய அத்தை ஜெயலலிதா ஆகிய மூன்று வலுவான பெண்களால் வளர்க்கப்பட்டேன். ஜெயலலிதா என்னை பாய் என்று கூப்பிடவே விரும்புவார் என விவேக் தெரிவித்துள்ளார்.
ஆளுமை மிக்க இந்த வலுவான 3 பெண்களால் நான் வளர்க்கப்பட்டதால் நானும் ஒரு ஸ்டிராங் மேன்தான் என நம்பிக்கையுடன் விவேக் தெரிவித்துள்ளார்.