ஸ்ரீனி வெட்ஸ் மஹி... பின்னணி என்ன? ரெய்டில் ஈடுபட்ட ஐடி அதிகாரிகள் சொன்ன ரகசியம்..!

First Published Nov 10, 2017, 5:16 PM IST
Highlights
secret behind it officials with car sticker srini weds mahi


நேற்றைய பரபரப்பு, சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனைகள். ஒரே நேரத்தில் பல இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனைகள் பெரிய அளவில் பிரமாண்டமாக நடத்தப் பட்டதால், பலருக்கும் இந்த சோதனைகள் பேரில் ஒரு ஆவல் அதிகரித்தது. 
இந்நிலையில், இந்த சோதனைக்கு வந்த அதிகாரி ஒருவரின் வாடகை காரில் ஸ்ரீனி வெட்ஸ் மஹி என்று ஒரு திருமண நிகழ்ச்சிக்கான ஸ்டிக்கர் இருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. உடனே, இது வருமான வரித்துறையின் திட்டமிடல் என்று செய்திகள் பரவின. 

ஆனால், வருமான வரி அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் இது குறித்து சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த வருமான வரி சோதனை, ஸ்ரீனி வெட்ஸ் மஹி என்றெல்லாம் பெயர் வைத்து  திட்டமிடப்பட வில்லை.  ஏதோ நாங்கள் இப்படி ஒரு பெயரை வைத்துக் கொண்டு வருமான வரி சோதனையில் ஈடுபட்டதாக கிட்டத்தட்ட எல்லா தமிழ்ச் சேனல்களிலும் சொல்லி ஒளிபரப்பினார்கள். அதையே மற்ற ஊடகங்களிலும் சொல்லி பதிவு செய்தார்கள். 

ஆனால் நடந்தது வேறு. அப்படி எல்லாம் எங்களிடம் திட்டமிடலில்லை. அதிகாலை 3 மணிக்கு எழுந்தார்கள் சோதனைக்குச் செல்ல வேண்டிய அதிகாரிகள். அவர்களிடம் அப்போதுதான், எந்த எந்த இடத்துக்கு சோதனைக்கு செல்ல வேண்டும் என்ற தகவல்களுடன் முகவரிகள் அளிக்கப்பட்டன. அந்த நேரத்தில் அவர்கள் செல்வதற்கான போக்குவரத்துக்கு டாக்ஸிகள் புக் செய்ய அறிவுறுத்தப் பட்டது. 

இதன்படி, ட்ராவல்ஸ் நிறுவனங்களுக்கு போன் செய்து, அந்த நேரத்தில் உடனே வருமாறு அவர்களிடம் கூறப்பட்டது. அது அதிகாலை நேரம் என்பதால், டாக்ஸி ஓட்டுநர்கள் முந்தைய நாள் இரவு பணி முடிந்து அல்லது வேலை அலுப்பின் காரணமாக, அவர்கள் ஓய்வு எடுத்து கொண்டிருக்கலாம். அந்த நேரத்தில் குறித்த முகவரிக்கு ஒரே நேரத்தில் அழைத்துச் செல்வார்களா என்ற அச்சம் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு இருந்தது. மேலும் குறித்த நேரத்தில் வந்து அழைத்து செல்வார்களா என்றும் கேள்விக் குறி இருக்கத்தான் செய்தது. 

எனவே, உடனடியாக வருமாறு அந்த வாகன ஓட்டுநர்களுக்கு நாங்கள் உத்தரவு பிறப்பித்தோம். அந்த குறைவான நேரத்தில், வாகனங்களை சுத்தம் செய்யவோ, வாகனங்களை கழுவி சுத்தமாக்கி வரவே அவர்களுக்கு நேரம் இல்லை. அப்படித்தான், முந்தைய நாள் அந்த டிராவல் ஏஜென்சியில் இருந்து ஒரு திருமண நிகழ்ச்சிக்குச் சென்றிருந்த கார்கள், அப்படியே எங்களுக்கு வந்தன. அவற்றில் தான் ஸ்ரீனி வெட்ஸ் மஹி என்று போடப்பட்டிருந்த ஸ்டிக்கர்கள் அப்படி இருந்தன. அவற்றை அந்த ஓட்டுநர்கள் அப்புறப்படுத்தாமல் வந்துவிட்டார்கள். 

இதனைக் கண்ட யாரோ ஒரு செய்தியாளர் இதனை, ஏதோ எங்கள் துறையில் இப்படி ஒரு ஐடியா எல்லாம் செய்து, இதற்கு ஒரு பேர் எல்லாம் கொடுத்து ஆப்ரேஷன் ஸ்ரீனி வெட்ஸ் மகி என்றது போல் செயல்பட்டதாக கூற, அதனையே எல்லா ஊடகங்களும் செய்தியில் தெரிவித்தன. ஆனால் எவரும் எங்களிடம் இது குறித்து பேசி, உண்மை நிலையைத் தெரிந்து கொள்ளவில்லை. போதாக்குறைக்கு  சிவாஜி படத்தில் வருவது போல் இந்த திட்டமிடல் இருந்தது என்றெல்லாம் தூக்கி வைத்து விட்டனர்...- என்று கூறியுள்ளார். 

இப்படி ஒரு விளக்கத்தை அவர்கள் தெரிவித்த போதுதான், வருமான வரித்துறையின் இந்த சோதனை மீது எவ்வளவு பெரிய எதிர்பார்ப்பும் ஆவலும் தமிழகத்தில் இருந்துள்ளது புரிந்தது. 
 

click me!