திமுகவின் கான்ஸ்டடைன் ரவீந்திரனுடன் ரகசிய உறவு? அதிமுக புகழேந்தி நீக்கத்தின் பின்னணி..!

By Selva KathirFirst Published Jun 15, 2021, 9:20 AM IST
Highlights

சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு திடீரென ஒரு நாள் ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக ஒரு வீடியோவை வெளியிட்டார் புகழேந்தி. அதில் சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர் பதவிக்கு ஓபிஎஸ் தான் தகுதி வாய்ந்தவர் எனவே ஓபிஎஸ்சை எதிர்கட்சித் தலைவராக்க இபிஎஸ் ஒத்துழைக்க வேண்டும் என்கிற ரீதியில் புகழேந்தி பேசியிருந்தார். இதன் மூலம் புகழேந்தி ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாடு எடுத்தது போன்ற தோற்றம் ஏற்பட்டது. 

பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி மற்றும் அந்த கட்சியை விமர்சித்த காரணத்தினால் தான் புகழேந்தி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக அவர் தரப்பினர் தகவலை பரப்பி வரும் நிலையில் உண்மை வேறு மாதிரியாக உள்ளது.

ஜெயலலிதா இருந்த வரை அதிமுகவின் கர்நாடக மாநிலச் செயலாளராக இருந்தவர் புகழேந்தி. சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு சிறை தண்டனை கிடைத்து பெங்களூர் சிறையில் இருந்த போது அவருக்கு தேவையான அனைத்தையும் கச்சிதமாக செய்து கொடுத்தவர் இவர். இதன் காரணமாக ஜெயலலிதாவின் அன்பை பெற்றதோடு சசிகலாவிற்கும் நெருக்கமானார் புகழேந்தி. அதிமுகவை ஓபிஎஸ் உ டைத்த போது சசிகலாவின் குரலாக ஊடகங்களில் புகழேந்தி பேச புகழ் வெளிச்சத்திற்கு வருகை தந்தார். சசிகலா சிறை சென்ற பிறகு தினகரனுக்கு நெருக்கமானார்.

ஆனால் சில மாதங்களிலேயே புகழேந்தியை தனது வீட்டிற்குள் விட வேண்டாம் என்று உத்தரவு போட்டார் தினகரன். இதன் பிறகு தினகரன் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் சேர புகழேந்தி முயற்சி மேற்கொண்டார். தீவிர ஆதரவாளராக இருந்தாலும் எதிர்தரப்புடன் புகழேந்தி தொடர்பில் இருப்பதை மோப்பம் பிடித்த காரணத்தினால் தான் அவரை கட்சியில் இருந்து தினகரன் ஒதுக்கி வைத்தார். இது அதிமுக தலைமைக்கும் தெரியும். எனவே தான் புகழேந்தியை கட்சியில் சேர்க்காமலேயே ஓபிஎஸ் – இபிஎஸ் வைத்திருந்தனர். இதன் பிறகு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்சை மாறி மாறி சந்தித்து ஒரு வழியாக அதிமுகவில் இணைந்தார் புகழேந்தி.

சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு திடீரென ஒரு நாள் ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக ஒரு வீடியோவை வெளியிட்டார் புகழேந்தி. அதில் சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர் பதவிக்கு ஓபிஎஸ் தான் தகுதி வாய்ந்தவர் எனவே ஓபிஎஸ்சை எதிர்கட்சித் தலைவராக்க இபிஎஸ் ஒத்துழைக்க வேண்டும் என்கிற ரீதியில் புகழேந்தி பேசியிருந்தார். இதன் மூலம் புகழேந்தி ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாடு எடுத்தது போன்ற தோற்றம் ஏற்பட்டது. ஆனால் எடப்பாடி பழனிசாமி எதிர்கட்சித்தலைவர் ஆனார். இந்த நிலையில் திடீரென அதிமுகவில் இருந்து புகழேந்தி நீக்கப்பட்டுள்ளதார். அதற்கான அறிவிப்பில் ஓபிஎஸ் – இபிஎஸ் என இருவருமே கையெழுத்திட்டிருந்தனர். தன்னுடைய ஆதரவாளரை எப்படி ஓபிஎஸ் தானே நீக்குவார் என்கிற கேள்வி எழுந்தது.

இது குறித்து விசாரித்த போது பாமக மற்றும் அன்புமணியை தான் விமர்சித்த காரணத்தினால் எடப்பாடி பழனிசாமி தன்னை கட்சியில் இருந்து நீக்கிவிட்டதாகவும், வேறு வழியே இல்லாமல் ஓபிஎஸ் இதற்கு உடன்பட்டதாகவும் புகழேந்தி கூறி வருகிறார். ஆனால் உண்மையில் புகழேந்தி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதற்கு காரணம் பாமகவிற்கு எதிராக பேசியது இல்லை என்பது தெரியவந்துள்ளது. தேர்தலுக்கு பிறகு எதிர்கட்சித் தலைவர் பதவிக்கு ஓபிஎஸ் பொருத்தமானவர் என ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார் புகழேந்தி. இந்த வீடியோவை புகழேந்தி வெளியிடுவது ஓபிஎஸ்சுக்கு தெரியாது என்கிறார்கள்.

இது குறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு தீவிரமாக விசாரித்த போது தான், புகழேந்தி திமுகவின் ஊடக விவாத ஒருங்கிணைப்பாளர் கான்ஸ்டடைன் ரவீந்திரனுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் புகழேந்தி விவாதங்களின் போது என்ன பேச வேண்டும், எதை பேசக்கூடாது என்று ரவீந்திரன் சில குறிப்புகளை வழங்க அதனை பின்பற்றி புகழேந்தி செயல்பட்டு வந்ததும் தெரியவந்ததாக கூறுகிறார்கள். அத்தோடு டிவி விவாதங்களில் அதிமுக சார்பில் யார் யாரை பங்கேற்கச் செய்ய வேண்டும் என்று திமுகவின் ரவீந்திரன் ஸ்கெட்ச் போட்டுக் கொடுக்க அதனை புகழேந்தி பக்காவாக செயல்படுத்தி வந்துள்ளார்.

இவற்றை எல்லாம் தெரிந்து கொண்டு புகழேந்தியின் ஸ்லீப்பர் செல் வேலைகளுக்கான ஆதாரங்களை திரட்டிய எடப்பாடி தரப்பு, அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும், ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே  பிரச்சனையை உருவாக்க வேண்டும் என்று திமுக புகழேந்தியை பயன்படுத்தி வந்துள்ளதை ஓபிஎஸ் தரப்பிடம் புட்டு புட்டு வைத்துள்ளது. மேலும் அதிமுகவின் செய்தி தொடர்பாளராக இருந்து கொண்டு திமுகவின் செய்தி தொடர்பாளராக செயல்பட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை ஓபிஎஸ்சும் ஏற்றுக் கொண்டே புகழேந்தி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மற்றபடி அவர் பாமகவிற்கு எதிராக பேசியதே தனக்கு எதிராக அதிமுக தலைமை நடவடிக்கை எடுக்கும் அதற்கு காரணமாக பாமகவை கூறிக் கொள்ளலாம் என்று முன்கூட்டியே போட்டு வைத்த திட்டம் என்கிறார்கள்.

click me!