கேரள அரசை பார்த்து கத்துக்குங்க.. முதலமைச்சர் ஸ்டாலினை திருப்பி அடித்த சீமான்..

Published : Jun 15, 2021, 08:51 AM IST
கேரள அரசை பார்த்து கத்துக்குங்க.. முதலமைச்சர் ஸ்டாலினை திருப்பி அடித்த சீமான்..

சுருக்கம்

அதுமட்டுமின்றி, தமிழ்நாடு மின்வாரியமும் மின்அளவீடுகள் குறித்துக் குழப்பமான அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை மேலும் திக்குமுக்காடச் செய்துள்ளது. முதலில் முந்தைய மாத அளவீடுகளைச் செலுத்தலாம் என்று அறிவித்த மின்சார வாரியம், அதனையடுத்து தற்போதைய மின் அளவீடுகளைப் புகைப்படம் எடுத்து மின்வாரிய இணையதளத்திற்கு அனுப்பி ஒப்புதல் பெற்றுக் கட்டணம் செலுத்தலாம் என்றறிவித்தது.

ஊரடங்கு ஏற்படுத்தியிருக்கும் பொருளாதார முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்கு மின்கட்டணம் செலுத்துவதிலிருந்து இரண்டு மாதங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் : 

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின் அளவீடுகள் குறித்தான குளறுபடி அறிவிப்புகளால் மக்கள் பெருங்குழப்பத்திற்கு ஆளாகியுள்ள நிலையில் மின்கட்டணத்தை உடனே செலுத்துவதற்கு அரசு வற்புறுத்தி வருவது அதிர்ச்சியளிக்கிறது. கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக கடந்த ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கினால் விளைந்த பொருளாதார நெருக்கடியிலிருந்தே பொதுமக்களும், தொழில்துறையினரும் இன்னும் மீண்டுவராத நிலையில் தற்போது மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குள்ளாகி இருக்கையில், அவர்களை மின்சாரக்கட்டணத்தை ஓரிரு நாட்களுக்குள் செலுத்தக்கோரி நெருக்குதலுக்கு உள்ளாக்குவது கண்டனத்திற்குரியது. 

அன்றாடம் வேலைக்குச் சென்று கிடைக்கும் சொற்ப வருவாயைக் கொண்டு பிழைத்து வரும் அமைப்புசாரா தொழிலாளர்களான தினக்கூலிகள், தெரு வியாபாரிகள் போன்ற எளிய மக்கள், கடந்த இரண்டு மாத காலமாக எவ்வித வருமானமுமின்றி வீட்டு வாடகை, உணவு, குடிநீர், மருத்துவம் முதலிய அடிப்படைத்தேவைகளைக்கூட நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் பரிதவித்து வருகின்றனர். இத்தகைய நெருக்கடியான பேரிடர் காலக்கட்டத்தில் அவர்களுக்கு உறுதுணையாய் நின்று அவர்களது துயர்போக்க உதவிகளைத் தந்து காக்க வேண்டியது அரசின் தலையாயக்கடமையாகும். அண்டை மாநிலமான கேரளத்தில் அம்மாநில அரசு மக்களின் இன்னல் நிலையை உணர்ந்து, குடிநீர் மற்றும் மின்சாரக் கட்டணத்தை இரண்டு மாதங்களுக்கு ரத்து செய்து உத்தரவிட்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் அதற்கு நேர்மாறான நிலை நிலவுவது ஏமாற்றமளிக்கிறது. ஊரடங்குக்காலத்தில் மின்கட்டணத்தைச் செலுத்த காலக்கெடு நிர்ணயித்து, அதற்குள் மின்கட்டணத்தைச் செலுத்துமாறு கட்டாயப்படுத்தப்படுவதும், அபராதம் விதிக்கப்படுமென அச்சுறுத்துவதும் மக்களைப் பதற்றத்திற்கும், பெருந்துயரத்திற்கும் ஆளாக்கிவருகிறது. 

அதுமட்டுமின்றி, தமிழ்நாடு மின்வாரியமும் மின்அளவீடுகள் குறித்துக் குழப்பமான அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை மேலும் திக்குமுக்காடச் செய்துள்ளது. முதலில் முந்தைய மாத அளவீடுகளைச் செலுத்தலாம் என்று அறிவித்த மின்சார வாரியம், அதனையடுத்து தற்போதைய மின் அளவீடுகளைப் புகைப்படம் எடுத்து மின்வாரிய இணையதளத்திற்கு அனுப்பி ஒப்புதல் பெற்றுக் கட்டணம் செலுத்தலாம் என்றறிவித்தது. ஆனால், அவ்வாறு அளவீடுகளைப் புகைப்படம் எடுத்து அனுப்பியவர்களுக்கு முறையான பதில் அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், கடந்த ஆண்டு அதே மாதத்திற்குச் செலுத்தப்பட்ட கட்டணத்தையே செலுத்தலாம் என்று தற்போது மீண்டும் ஒரு மாற்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது மக்களது குழப்பத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. கடந்தாண்டு ஊரடங்கு இல்லாத காலக்கட்டத்தில் மிக அதிகமாக மின்கட்டணம் செலுத்திய சிறுதொழில் முனைவோர், வியாபாரிகள் போன்றோரை தொழில் இயக்கம் இல்லாத தற்போதையச் சூழலிலும் அதே அளவிலான மின் கட்டணத்தைச் செலுத்தக்கூறுவது எந்த வகையிலும் நியாயமல்ல. 

ஆகவே, ஊரடங்கால் தொழில் முடங்கிப் போதிய வருமானமின்றி வாழ்வாதாரமே கேள்விக்குறியாகியிருக்கும் பெரும்பான்மை தமிழக மக்களின் நிலையுணர்ந்து, அவர்களை மேலும் குழப்பத்திற்கும், நெருக்கடிக்கும் ஆளாக்காமல் இரண்டு மாதங்களுக்கு மின்கட்டணம் செலுத்துவதிலிருந்து முழுமையாக விலக்கு அளித்துத் துயர்போக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்
100 பேர் கூட இல்லாத டாக்டர் ராமதாஸ் டெல்லி போராட்டம்..! ஒங்கும் அன்புமணி கை