​50 பேருக்கு சீட்டு... சசிகலா கனவுக்கு வேட்டு... அடியோடு நசுக்க ஆட்டத்தை ஆரம்பித்த எடப்பாடி..!

By Thiraviaraj RMFirst Published Feb 10, 2021, 12:50 PM IST
Highlights

அந்த ஐம்பது பேர் கொண்ட பட்டியலில் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் முக்கிய நிர்வாகிகள் அடங்கி இருக்கும். 

பெங்களூருவில் சசிகலா 7 நாள் ஓய்வில் இருந்தபோது, அவரை ஒருசில அதிமுக புள்ளிகள் சந்தித்தாகவும், எம்.எல்.ஏ.,க்கள் சிலர் சந்தித்து பேசியதாகவும் செய்திகள் வெளியாகின. அதேபோல, சசிகலா கையில் செல்போன் ஒப்படைக்கப்பட்டவுடனே, அமைச்சர்கள் சிலரும் அவரை தொடர்பு கொண்டு பேசியதாக தகவல்கள் கசிந்தன. அதனால், சசிகலா சென்னைக்கு வரும்போது, அவரை வரவேற்க அதிமுக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், ஒருசில அமைச்சர்களாவது நேரில் வந்து வரவேற்பு தருவார்கள், தங்கள் ஆதரவை தருவார்கள் என்று அமமுக தரப்பில் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அப்படியொன்றும் நடக்கவில்லை. யாரும் சசிகலாவுடன் தொடர்பு வைக்க வேண்டாம் என்று ஒத்த வார்த்தையை, அதுவும் வாய்மொழியாகத்தான் தன் நிர்வாகிகளிடம் எடப்பாடியார் கேட்டு கொண்டிருந்தார். அதற்கே இவ்வளவு மதிப்பு தந்து, யாருமே சசிகலாவை வரவேற்க செல்லவில்லை. அதேபோன்று காரில் கட்சி கொடியை கட்டக்கூடாது என்று போலீசார் எச்சரித்தும் கொடியுடன் அங்கிருந்து சசிகலா கிளம்பியது அதிமுக தரப்பை கொந்தளிக்க வைத்தது. இதனால், ஒருசில இடங்களில் அதாவது, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலுார் போன்ற மாவட்டங்களில், அதிமுக, அமமுக இடையே மோதல் வெடிக்கும் சூழல்கூட ஏற்பட்டது. ஆனால், முதல்வர் தரப்பு துரிதமாக செயல்பட்டது. யாரும் எந்த மோதலிலும் ஈடுபட்டு விடக்கூடாது, அப்படி நடந்தால் நம் ஆட்சிக்குதான் கெட்ட பெயர் வந்துவிடும், அமைதி காக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படவும், அதன்படியே அதிமுகவினர் நடந்து கொண்டனர்.

அடுத்து வேலூரில் நடந்த கூட்டத்தில் எடப்பாடியார், "அதிமுகவைப் பின்னடைய செய்வதற்கு சிலர் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். டி.டி.வி.தினகரன் அதில் ஒருவர். 10 ஆண்டு காலம் கட்சியிலேயே கிடையாது. அம்மா அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கியே வெச்சிருந்தாங்க. அம்மா மறைவுக்கு பிறகு அவர் கட்சியில சேர்ந்துக்கிட்டதா அவரே அறிவிச்சுக்கிட்டாரு. அவர் அதிமுகவை கைப்பற்றுவதற்கு எவ்வளவு முயற்சி செய்தார் தெரியுமாங்க? எங்க கட்சி எம்எல்ஏக்கள் 18 பேரை பிடிச்சிக்கிட்டுப் போயிட்டாரு. அந்த 18 பேரையும் நடுரோட்டுலயும் விட்டுட்டுப் போயிட்டாரு. அவரை நம்பி போனவங்க எல்லாம் நடுரோட்டுலதான் நிக்கணும். இப்படி ஏதாவது செய்து, அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி திமுகவுக்கு உதவுறதுக்காக சில பேரு சதித்திட்டம் தீட்டிக்கிட்டிருக்காங்க. அதை அதிமுக முறியடிக்கும். சில சதிகாரர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு சதி வலையை இன்றைக்கு பின்னிக் கொண்டு இருக்கிறார்கள். அந்த சதி வலையை சின்னபின்னாக தூள் தூளாக தகர்த்தெறிந்து, அம்மா அரசு தொடர நாம் பாடுபடுவோம்"என்றார்.

ஆனாலும் எந்தச் சூழலிலும் அதிமுகவை சார்ந்தவர்கள் சசிகலா பக்கம் சென்று விடக்கூடாது என்பதில் படு எச்சரிக்கையாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதற்காக சில அதிரடி திட்டங்களை கையிடுத்து இருக்கிறார் அவர். அதாவது தற்போது கட்சியில் இருக்கும் முக்கிய அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்களை முற்றிலுமாக தன் வசப்படுத்துவது. அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் ஜெயலலிதாவின் பிறந்தாளான இம்மாதம் 24ம் தேதி 50 முக்கிய வேட்பாளர்களை அறிவிக்க இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அந்த ஐம்பது பேர் கொண்ட பட்டியலில் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் முக்கிய நிர்வாகிகள் அடங்கி இருக்கும். இப்படி முன்பே அவர்களை வேட்பாளர்களாக அறிவித்தால் அவர்கள் சசிகலா பின்னால் போவதை தடுக்க முடியும் என நம்புகிறார் எடப்பாடி பழனிசாமி.

click me!