பள்ளிகள் திறப்பு தற்போது சாத்தியமில்லை.. வதந்திகளை நம்ப வேண்டாம்.. அமைச்சர் செங்கோட்டையன்..!

By vinoth kumarFirst Published Sep 22, 2020, 12:36 PM IST
Highlights

அரசு பள்ளிகளில் இதுவரை 15.3 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். தனியார்  பள்ளியை சேர்ந்த 2.5 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர். மேலும். விடுமுறையை மீறி ஆன்லைன் வகுப்புகள் எடுக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார். 

தமிழகத்தில் தற்போதைக்கு பள்ளிகள் திறப்பது சாத்தியமில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் மாதம் முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டது. கொரோனா இன்னும் குறையாத காரணத்தால் ஊரடங்கு உத்தரவு முழுமையாக விலக்கி கொள்ளப்படவில்லை. பல்வேறு தளர்வுகளுடன் அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டு இருந்தாலும் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் பாடங்கள் நடைபெறுகிறது. 

ஆன்லைன் வகுப்புகள் நகர்புறங்களில் நடைமுறைக்கு வந்தாலும் கிராமப் பகுதிகளில் இன்னும் முழுமையாக ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுவது இல்லை. ஆன்ட்ராய்டு செல்போன் எல்லா மாணவர்களிமும் இல்லாத காரணத்தால் இதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. பல மாணவர்கள் ஆன்லைன் வகுப்பு பாடங்கள் புரியாமல் தவித்து வருகிறார்கள். பள்ளிக்கூடங்கள் திறந்தால்தான் மாணவர்களுக்கு பாடங்கள் புரியும் என்றும் பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை மாணவர்களின் விருப்பத்துடன் பள்ளிக்கூடங்களில் வகுப்புகளை தொடங்க மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது. விருப்பப்படும் மாநிலங்கள் பெற்றோர்-ஆசிரியர்களுடன் கலந்து பேசி வகுப்புகளை தொடங்கலாம் என்று அறிவுறுத்தி உள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. அதேபோல், தமிழகத்திலும் காலாண்டு விடுமுறை முடிந்த பிறகு பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாகவும், அக்டோபர் 5-ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால், இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். 

இதுதொடர்பாக கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன்;- தமிழகத்தில் தற்போதைக்கு பள்ளிகள் திறப்பது சாத்தியமில்லை. நீட் தேர்வில் தமிழக பாடத்திட்டத்தில் இருந்து 174 கேள்விகள் இடம்பெற்றுள்ளன. முழு கல்வி கட்டணம் வசூலித்த தனியார் பள்ளிகள் பற்றி விவரம் கேட்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் இதுவரை 15.3 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். தனியார்  பள்ளியை சேர்ந்த 2.5 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர். மேலும். விடுமுறையை மீறி ஆன்லைன் வகுப்புகள் எடுக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார். 

click me!