சர்ச்சைகளை எழுப்பும் இல்லம் தேடி கல்வி.. முக்கிய அப்டேட் கொடுத்த அமைச்சர்..

By Thanalakshmi VFirst Published Dec 13, 2021, 7:06 PM IST
Highlights

அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடங்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 
 

தமிழகத்தில் 'இல்லம் தேடி கல்வி' என்ற திட்டத்தை சில மாதங்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. கொரோனா பெருந்தொற்று தொடர் பொதுமுடக்கக் காலங்களில்,  1 முதல் 8-ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியைக் குறைக்கும் வகையில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தின்படி பள்ளி முடிந்து மாலை நேரங்களில் இல்லம் தேடி கல்வி மையங்களில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை இந்த  மையங்களுக்கு அனுப்ப வேண்டும் எனவும் 20 மாணவர்களுக்கு ஒரு தன்னார்வலர் என்ற வீதத்தில் பாடங்கள் கற்பிக்கப்படும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

ஆறு மாத காலத்திற்கு இந்த திட்டம் செயல்படும் என்றும் மொத்தம் 17 லட்சம் தன்னார்வலர்கள் வரை இந்த திட்டத்திற்கு தேவைப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு  வரையிலான மாணவர்களுக்கு பாடங்கள் எடுப்பதற்கு,  தன்னார்வலர்கள் 12 ஆம் வகுப்பு வரை படித்திருந்தால் போதும் என்றும் அறிவித்தது. இவர்களுக்கு ஊக்கத் தொகையாக 1,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடர்பாக பள்ளி கல்வித் துறை அமைச்சர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அதில், இல்லம் தேடி கல்வித் திட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது என்று கூறினார். திருச்சி, திண்டுக்கல், மதுரை, தஞ்சை, கிருஷ்ணகிரி, ஈரோடு ,நாகை, கடலூர், உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

இல்லம் தேடி கல்வி திட்டம் கொண்டு வந்தபோது இதுகுறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கையின் ஒரு அங்கமாகத்தான் இல்லம் தேடி கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் திமுக கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பலரும் இத்திட்டத்தை எதிர்த்தனர்.

தன்னார்வலர்களைத் தேர்வு செய்யும் முறை, அவர்களுடைய பங்களிப்பு, அவர்களால் கற்பிக்கப்படும் மாணவ மாணவியரின் கற்றல் மேம்பாடு ஆகியவை தொடர்ந்து கல்வியாளர்கள் கொண்ட குழுவால் கண்காணிக்கப்படும் என்றும் அரசின் வழிகாட்டுதல்களை முறையாகக் கடைப்பிடிப்பவர்கள் மட்டுமே தன்னார்வலர்களாகத் தொடர அனுமதிக்கப்படுவர் என்றும் இதில் எந்த குழப்பமும் இல்லை' என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அப்போது விளக்கம் அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

click me!