அரியலூர் மாணவி தற்கொலை அரசியல் வேண்டாம்.. 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் அறிவிப்பு..

By Thanalakshmi VFirst Published Jan 24, 2022, 3:12 PM IST
Highlights

10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மே மாத இறுதியில் நடைபெறும் என்றும் பள்ளிகளில் மாணவர்களை ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் வேலை வாங்ககூடாது என்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
 

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரியலூர் மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக, தஞ்சை திருக்காட்டுப்பள்ளியில் மாணவி பயின்ற பள்ளியில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம், துறை சார்ந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பள்ளி கிறிஸ்தவ கல்வி நிறுவனமாக இருந்தாலும், இந்துக்கள்தான் அதிகமானோர் அங்கு படிக்கின்றனர். அங்கு படிக்கின்ற மாணவர்களிடம் நாங்கள் கருத்து கேட்டுள்ளோம். தற்போது படிக்கின்ற மாணவர்கள் மட்டுமின்றி, ஏற்கெனவே அந்தப் பள்ளியில் படித்துமுடித்து வெளியே சென்ற மாணவர்களிடமும் நாங்கள் கருத்து கேட்டுள்ளோம். இந்த விவரங்கள் அனைத்து காவல்துறை விசாரணையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கண்டிப்பாக தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரப்படும்.

மரண வாக்குமூலத்தை அரசு துறையைச் சேர்ந்தவர்கள்தான் பதிவு செய்ய வேண்டும். அதையும்மீறி ஒரு சில அமைப்புகள் சென்று, அந்தக் குழந்தையைத் தூண்டும் விதமாக அப்படியிருக்குமா, இப்படியிருக்குமா என கேட்கின்றபோது, அந்தக் குழந்தை உறுதியாக எதையும் சொல்லாமல், இருக்கலாம் என்றே பதிலளித்துள்ளார். எனவே, அமைப்புகள் இதை அரசியலாக்க வேண்டாம். குழந்தையிடம் அவ்வாறு வீடியோ பதிவு செய்தது தவறு. சட்ட ரீதியாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதை காவல்துறை எடுத்துவருகிறது. அரசியல் ரீதியாக பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், காரணங்கள் எதுவாக இருந்தாலும் இழந்த அந்த உயிரை மீட்கமுடியாது. இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழக்கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது 

மேலும், மாணவியின் மரணம் தொடர்பாக, முதற்கட்டமாக விடுதி காப்பாளர் கைது செய்யப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஏதேனும் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தால், உடனடியாக ஹெல்ப்லைன் மூலம் புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து பல்வேறு புகார்களை பெற்று நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பள்ளிகளில் மாணவர்களை ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் வேலை வாங்ககூடாது. ஒருவேளை ஆட்கள் பற்றாக்குறை இருந்தால் சம்பந்தப்பட்ட CEO-களிடம் தெரிவிக்க வேண்டும். 10 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயமாக மே அல்லது மே மாத இறுதியில் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

click me!