மதமாற்றத்திற்கு எதிராக பாஜக இந்து மக்களை திரட்டும்... ஹெச்.ராஜா ஆவேசம்..!

By Thiraviaraj RMFirst Published Jan 24, 2022, 3:09 PM IST
Highlights

மதமாற்ற தடை சட்டம் கொண்டு வர வேண்டும். மதமாற்றத்திற்கு எதிராக பாஜக ஆதரவுடன் இந்து அமைப்புகள், மக்கள் திரள் அமைப்பை ஏற்படுத்துவோம்.

மதமாற்றத்திற்கு எதிராக பாஜக ஆதரவுடன் இந்து அமைப்புகள், மக்கள் திரள் அமைப்பை ஏற்படுத்தும் என பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில மையக் குழுக் கூட்டம், கட்சி தலைமை அலுவலகமான சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் நடைபெற்றது. மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா, சட்டப்பேரவை பாஜக குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 11 பேர் பங்கேற்றனர்.

இதில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கூட்டணி , மாநில நிர்வாகிகள் மாற்றம் , அரியலூர் சிறுமி மரணம் உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா, அரியலூர் சிறுமி மரணம் விவகாரத்தில், கிறிஸ்தவ பள்ளிகள் மதமாற்ற கேந்திரமாக மாறிவிட்டது. மதமாற்ற தடை சட்டம் கொண்டு வர வேண்டும். மதமாற்றத்திற்கு எதிராக பாஜக ஆதரவுடன் இந்து அமைப்புகள், மக்கள் திரள் அமைப்பை ஏற்படுத்துவோம். தமிழ்நாட்டு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள பிரச்சனைகள் பற்றி பாஜக மாநில மைய குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது;

மாணவி லாவண்யா பள்ளி நிர்வாகத்தின் நிர்ப்பந்தம் காரணமாகவே தற்கொலை செய்துகொண்டார். மதமாற மறுத்ததால் கழிவறை கழுவ கடுமையான பணிகள் செய்ய உத்தரவிடப்பட்டு துன்புறுத்தலின் காரணமாக தற்கொலைக்கு ஆளான லாவண்யாவிற்கு நியாயம் கிடைக்க வேண்டும். தமிழக அரசு அந்த குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் உடனடியாக வழங்க வேண்டும். தற்போது மத்திய அரசிலிருந்து வழிகாட்டும் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு அதிகாரிகள், எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் அழைத்து கொள்வோம் என்றுள்ளது. இதற்கு திருமாவளவன் போன்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் யாராவது ஒன்றிய அரசு என யாராவது சொன்னால், குஜராத், மணீப்பூருக்கு தேச பக்தி பற்றி பயிற்சி அளிக்க அழைத்துக்கொள்வார்கள்.  இந்தியாவில் 1947 ஆகஸ்ட் மாதம்  15ஆம் தேதி நமக்கெல்லாம் அரசியல் சுதந்திரம் கிடைத்தது. ஆனால் தமிழ்நாட்டில் உள்ள இந்துக்களுக்கு மத சுதந்திரம் கிடைக்க வில்லை. மத சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்றால், மத வியாபாரிகளை சிறையில் அடைக்க வேண்டும். அதற்காக மதமாற்ற தடை சட்டம் கொண்டு வரவேண்டும். அதற்காக தொடர்ந்து போராடுவோம். ’’ எனத் தெரிவித்தார்.

click me!