
இந்தியா தற்போது உலகில் எத்தனை நண்பர்களைக் கொண்டுள்ளது, அல்லது தேவைப்படும் நேரங்களில் நமக்கு ஆதரவாக நிற்கக்கூடிய எத்தனை நண்பர்களை இந்தியா உருவாக்கியுள்ளது? பதில்களைத் தேடினால், நீங்கள் யாரையும் கண்டுபிடிக்க முடியாது.இந்தியாவின் நீண்டகால நண்பரான ரஷ்யா கூட, ஆபரேஷன் சிந்தூரின் போது வெளிப்படையாக இந்தியாவுக்கு ஆதரவளிக்கவில்லை. அமெரிக்க விவகாரம் முற்றிலும் வேறுபட்டது. இந்தியாவுடன் நல்ல உறவுகளைக் கொண்ட பிற நாடுகளும் வெளிப்படையாகப் பேசுவதையும், பதிலளிப்பதையும் தவிர்த்து வருகின்றன. ஆனால், பாகிஸ்தானுக்கு பல நாடுகளிடம் இருந்து வெளிப்படையான ஆதரவு கிடைத்துள்ளது.
செப்டம்பர் 17 அன்று, பாகிஸ்தானும், சவுதி அரேபியாவும் ஒரு பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பின் ரியாத் பயணத்தின் போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். "முக்கிய பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம்" என்று அழைக்கப்படும் இந்த ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் இடையிலான பல்லாண்டுகால கால பாதுகாப்பு கூட்டாண்மையை வலுப்படுத்துவதாக கூறுகிறது.
ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடந்தால், மற்ற நாடும் அதைத் தன் மீதான தாக்குதலாகக் கருதும் என்றும், இரு நாடுகளும் அதற்கு பதிலளிக்கும் என்றும் இந்த ஒப்பந்தம் முக்கியமாகக் கூறுகிறது. இந்திய வெளியுறவு அமைச்சகமும் நிலைமையைக் கண்காணித்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகால ஒப்பந்தம் முறைப்படுத்தப்படுவதை அரசு அறிந்திருப்பதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு, உலகளாவிய ஸ்திரத்தன்மையில் இந்த வளர்ச்சியின் தாக்கங்களை அரசு ஆய்வு செய்யும் என்று அவர் கூறினார். இந்தியாவின் தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்கும், அனைத்துத் துறைகளிலும் விரிவான தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அரசு உறுதிபூண்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் இது எந்தவொரு குறிப்பிட்ட நாட்டிற்கும் அல்லது குறிப்பிட்ட நிகழ்வுகளுக்கும் எதிர்வினை அல்ல, மாறாக இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால, ஆழமான ஒத்துழைப்பின் நிறுவனமயமாக்கல் ஆகும். நீண்டகால பாதுகாப்பு கவலைகளை நிவர்த்தி செய்வதற்காக வளைகுடா முடியாட்சிகள் இஸ்ரேல், ஈரானுடனான உறவுகளை சமநிலைப்படுத்த முயற்சிக்கும் நேரத்தில் இந்த ஒப்பந்தம் வந்துள்ளது.
சவுதி அரேபியா, பாகிஸ்தானுடன் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருந்தாலும், இந்தியாவுடனான அதன் உறவுகளுக்கு தீங்கு விளைவிக்க விரும்பாது என்று பாதுகாப்பு நிபுணர் ஓய்வு பெற்ற லெப்டினன்ட் கர்னல் ஜே.எஸ்.சோதி விளக்குகிறார். இந்தியா, சவுதி அரேபியாவுடன் நல்ல உறவைக் கொண்டுள்ளது. வளைகுடா நாடு முழுவதும் ஏற்கனவே இந்தியர்களால் நிறைந்துள்ளது. ஆனாலும், இந்த ஒப்பந்தம் சவுதி அரேபியாவை, பாகிஸ்தானை ஆதரிக்க கட்டாயப்படுத்தும். மோதல் ஏற்பட்டால், அது நேரடியாகத் தாக்குவதற்குப் பதிலாக இராணுவ உதவியை வழங்க முடியும்.
ஆப்பரேஷன் சிந்தூரின் போது, மூன்று நாடுகள் சீனா, துருக்கி, அஜர்பைஜான் ஆகியவை பாகிஸ்தானை வெளிப்படையாக ஆதரித்தன. இப்போது, இந்த ஒப்பந்தத்தின் மூலம் பாகிஸ்தானும், சவுதி அரேபியாவின் உறுதியான ஆதரவைப் பெறும். மறுபுறம், இந்தியா அமெரிக்கா, ரஷ்யா அல்லது வேறு எந்த நாட்டிடம் இருந்தும் வெளிப்படையான ஆதரவைப் பெறவில்லை. ரஷ்யாவும் இந்தியாவை தயக்கத்துடன் மட்டுமே ஆதரித்தது.
இந்தியா தனது பாதுகாப்புத் தயார்நிலையை விரைவுபடுத்த வேண்டும். உலகெங்கிலும் உள்ள பிற நாடுகளுடன் அதன் பாதுகாப்பு உறவுகளை விரிவுபடுத்த வேண்டும். சவுதி அரேபியா ஒரு சிறிய இராணுவத்தைக் கொண்டிருக்கலாம். ஆனால் அது குறிப்பிடத்தக்க இராணுவ சக்தியைக் கொண்டுள்ளது. அமெரிக்கா, சீனா, ரஷ்யாவிடம் இருந்து மிகவும் மேம்பட்ட ஆயுதங்களைப் பெறுகிறது. பயங்கரவாதப் பிரச்சினைகளில் சவுதி அரேபியா முன்பு இந்தியாவை ஆதரித்ததைப் போல, இந்தியாவும் சவுதி அரேபியாவுடனான தனது உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டும்.