
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா, நாளை பரோல் கிடைக்க வாய்ப்புள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சசிகலாவின் கணவர் நடராஜன், உடல்நலக் குறைவு ஏற்பட்டதன் காரணமாக, தாம்பரம் அருகே மேடவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. சிறையில் இருக்கும் சசிகலா பரோலில் வெளிவருவதற்கான ஏற்பாடுகள் கடந்த சில தினங்களாக செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், மருத்துவமனையில் கணவரை பார்க்க சசிகலாவுக்கு நாளை பரோல் கிடைக்க வாய்ப்புள்ளதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னை, பெசன்ட் நகரில் அதிமுக அம்மா அணியின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது பேசிய அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடராசனுக்கு, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளதாக கூறினார்.
மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கணவர் நடராசனைப் பார்ப்பதற்காக சசிகலா பரோலில் வர ஏற்பாடு செய்து வருவதாக அவர் கூறினார். சசிகலாவுக்கு 15 நாட்களுக்கு பரோல் கிடைக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் டிடிவி தினகரன் கூறினார்.